Apr 29, 2015

வங்கி ஏடிஎம், டெபிட் கார்டு ரகசிய எண்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி டெல்லியில் 2 ஆசாமிகள் கைது

* வாட்ஸ் அப்பில் வெளியான தகவலை வைத்து போலீஸ் நடவடிக்கை- பரபரப்பு தகவல்கள்

சென்னை : வங்கி அலுவலர் போல் போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களின் வங்கி ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டின் ரகசிய எண்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். வாட்ஸ்அப்பில் வெளியான தகவலை வைத்தே அவர்கள் பிடிபட்டனர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப்பில் கடந்த சில நாட்களாக பல நல்ல தகவல்களும், மிரட்டல்களும் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வெளியான தகவலில், வங்கி அதிகாரி போல ஒருவர், வாடிக்கையாளரை மிரட்டும் தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது. இதேபோல பலருக்கும் அந்த போன் வந்திருந்தது.

அதில் அடையாளம் தெரியாத நபர்களின் போனில் இருந்து பல்வேறு நபர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. எதிர் முனையில் பேசிய ஆசாமிகள் “நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களது ஏடிஎம் கார்டின் ஆயுட்காலம் முடிய போகிறது. நீங்கள் உங்களது ஏடிஎம் கார்டு ரகசிய எண் மற்றும் கார்டின் மேல் பொறிக்கப்பட்டுள்ள எண்ணை உடடியாக தெரியுங்கள். தெரிவித்தால் தொடர்ந்து ஏடிஎம் கார்டு செயல்பாட்டில் இருக்கும். இல்லை என்றால் இன்று மாலைக்கு பிறகு கார்டை உபயோகப்படுத்த முடியாது. அது செயல் இழந்து விடும் என்று தெரிவித்தனர். இதனால், பயந்து போன வங்கி வாடிக்கையாளர்கள் இதை உண்மை என நம்பி வங்கி ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு எண்களை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான பணம் மாயமானது. இதில், பொதுமக்கள் மட்டும் அல்லாமல் பல போலீசாரும் பணத்தை பறி கொடுத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்ையை பொறுத்தவரை ஐசிஐசிஐ வங்கியின் பகுதி மேலாளர் பிரகாஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், தங்களது வாடிக்கையாளர்கள் 42 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை அபேஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அன்பழகன், எஸ்ஐக்கள் செல்வராணி, மீனாப்பிரியா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

முதல் கட்டமாக போன் அழைப்பு எங்கிருந்து வருகிறது என ஆய்வு செய்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட அழைப்பு டெல்லியில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தனிப்படை டெல்லி விரைந்தது. செல்போன் டவர் லொக்கேசனை அடிப்படையாக வைத்து டெல்லி உத்தம் நகர், ஹாஸ்டல் சாலை, ஏ1 பிளாக்கில் பதுங்கி இருந்த தீப்குமார் (33), அதே பகுதியை சேர்ந்த அவரது கூட்டாளி பிரவின் குமார் காசியப் (32) இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான அஸ்ரப் அலி, அவரது கூட்டாளி சன்னி இருவரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். மோசடி குறித்து தீப் குமார் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்:

7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். பிரவின் குமார் காசியப் பட்டப்படிப்பு படித்துள்ளார். இருவரும் டெல்லி உத்தம் நகரில் சிவ சக்கி டெலிகாம் என்ற சிம்கார்டு கடை நடத்தி வந்தோம். தங்களிடம் ஏராளமானவர்கள் புதிய சிம்கார்டுகளை வாங்கி செல்வார்கள். சிம்கார்டுகளை பெற அவர்களின் முகவரிக்கான சான்று மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்தை கொடுப்பார்கள். நாங்கள் அவர்களிடம் கூடுதலாக முகவரி சான்று மற்றும் புகைப்படத்தை பெற்று வைத்துக் கொள்வோம். அவற்றை வைத்து எங்களுக்கு தேவையான சிம்கார்டுகளை பெற்றுக் கொள்வோம். போலியான கையெழுத்துக்களையும் நாங்களே போட்டுக் கொள்வோம். இப்படி பெறும் சிம்கார்டுகளை டெல்லியை சேர்ந்த அஸ்ரப் அலி மற்றும் சன்னி ஆகியோரிடம் கூடுதலான விலையில் விற்பனை செய்வோம். இதில், எங்களுக்கு பணம் குவிந்தது.

மோசடியாக பெறப்பட்ட சிம்காட்டு மூலம் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி லட்சக்கணக்கான பணத்தை அஸ்ரப் அலியும், சன்னியும் மோசடி செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே எங்களிடம் அவர்கள் கொடுத்தனர். நாங்கள் கைது செய்யப்பட்டதை தெரிந்து கொண்ட இருவரும் நைசாக தப்பி விட்டனர் என்று தீப் குமார் வாக்குமூலமாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மோசடி நடந்தது எப்படி?

தீப்குமார் மற்றும் பிரவின் குமார் காசியப் இருவரிடமும் போலி சிம்கார்டுகளை பெற்றுக் கொண்ட அஸ்ரப் அலியும் அவரது கூட்டாளி சன்னியும் ஆடம்பர அறை ஒன்றை எடுத்துள்ளனர். அவற்றில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளை தெரிந்தவர்களை தனித்தனியாக தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்தி உள்ளனர். தமிழ் தெரிந்த வாடிக்கையாளர்களை ஏமாற்ற வேண்டும் என்றால் தமிழ் தெரிந்த பணியாளர் பேசி சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளரின் ரகசிய எண்ணை பெறுவார். மலையாளம் தெரிந்த வாடிக்கையாளர் என்றால் மலையாளம் தெரிந்த பணியாளர் பேசுவார். இப்படி அனைத்து மொழி தெரிந்த வாடிக்கையாளர்களையும் கும்பல் வளைத்து போட்டுள்ளது.

தேவையான தகவல்கள் கிடைத்த உடன் மின்னல் வேகத்தில் கிடைத்த ரகசிய எண்களை போலியாக கார்டு ஒன்றை தயாரிக்க தனி கும்பல் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலின் பின்னணியில் 50க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உடந்தையாக இருந்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகள் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.

0 comments:

Post a Comment