Apr 2, 2011

இன்டர்நெட் – ஏமாறாமல் இருக்க

இன்டர்நெட் – ஏமாறாமல் இருக்க
இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம். இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.
1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.
2. அக்கவுண்ட் எண் தரலாமா? மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.
3. தானாக தனி நபர் தகவல் தரலாமா? ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.
4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் – அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி; உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.
5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.
6. பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடியுங்கள்:
இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள்.

எந்த இடத்திலும் இன்டர்நெட்

எந்த இடத்திலும் இன்டர்நெட்
இன்டர்நெட் இணைப்பினை எளிதாக எந்த இடத்திலும் மேற்கொள் ளலாம். இதற்கென பல நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர். சற்றுப் பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக் கம்ப்யூட்டரிலும் (டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து, இன்டர்நெட்டில் உலா வரலாம். பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்ட ரில் உள்ள நெட்வொர்க் இணைப்பினைச் சிரமப்படுத்த வேண்டியதில்லை.
இது போன்ற இன்டர்நெட் இணைப்புகளால், நாம் அலுவல் காரணமாக வெளியூர்களுக்குச் செல்கையில் அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அல்லது நம் லேப்டாப்பில் இந்த டேட்டா கார்ட்களை இணைத்துப் பயன்படுத்த முடிகிறது.
இருந்தாலும், சில வேளைகளிலும் இவையும் நம் காலை வாரிவிடுகின்றன. இணைப்பு தராமல்,ஏதாவது ஒரு எர்ரர் குறியீட்டினைக் காட்டிவிட்டு, தொடர முடியாமல் உறைந்துவிடுகின்றன. இதனால் நம் வேலைகள் தடை படுகின்றன.
இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க நாம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
1. மொபைல் இன்டர்நெட்டுக்கு ஒரே நிறுவனமா? எப்போதும் இன்டர்நெட் இணைப்பு பெற, குறிப்பாக, நாம் செல்லும் இடங்களில் எல்லாம் இன்டர்நெட் இணைப்பு பெற, ஒரே நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு கார்ட் அல்லது அட்டையை நம்ப வேண்டாம். நீங்கள் வாங்கியுள்ள இணைப்பு ட்ரைவினைத் தந்த நிறுவனத்தின் இன்டர்நெட் தொடர்பு, நீங்கள் வசிக்கும் நகரில் நல்ல வேகத்தில் கிடைக்கலாம். ஆனால், மற்ற நகரங்களில் அந்த நிறுவனத்தின் டவர்கள் சரியான திறன் கொண்டு இயங்காததால், வேகத்தில் தடைபடலாம். சென்னையில் சரியாக இயங்கும் ஒரு நெட்வொர்க் கார்ட், டில்லியில் அல்லது மதுரையில் பாதி அளவு மட்டுமே வேகம் தரலாம்; அல்லது அந்த நகரிலிருந்து சிறிது தொலைவு தள்ளிப் போனால், இயங்காமலேயே இருக்கலாம். எனவே ஒன்றுக்கு இரண்டாக நெட்வொர்க் கார்டுகளை, வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
2.குறைந்த வேக மொபைல் இன்டர்நெட் இணைப்பு: உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்து பவர்களுக்கு வித்தியாசமான பிரச்னை உண்டாகலாம். உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பிற்கான ஐகானில் ஐந்து கட்டங்களும் நிறைவு பெற்று, சிக்னல் மிக ஸ்ட்ராங்காக இருப்பதாகக் காட்டப்படலாம். ஆனால் டேட்டா மிக மெதுவாக, நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் கிடைக்கும். இதில் என்ன சிக்கல் என்றால், உங்கள் மொபைல் போனுக்கும் அருகில் உள்ள அதன் டவருக்கும் சிக்னல் பரிமாற்றம் மிக வேகமாக உள்ளது. ஆனால் அந்த சிக்னல் டவரினை அதிகம் பேர் பயன்படுத்துவதால், டேட்டா மிக மெதுவாகக் கிடைக்கிறது. எனவே உடனே இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்றால், உங்கள் இடத்தை மாற்றிப் பார்க்க வேண்டும். சில வேளைகளில், சிக்னல் பரிமாற்றம் மிக மோசமாக இருக்கும்; ஆனால் டேட்டா வரத்து வேகமாக இருக்கும். இதற்குக் காரணம், உங்கள் சிக்னல் டவரைக் குறைந்த இணைப்புகளே பயன்படுத்துவதால் தான்.
3. விடுதிகளில் வை-பி: பல சாதாரண விடுதிகள் கூட, இப்போதெல்லாம் அவர்கள் விடுதி முழுவதையும் வை-பி செய்திருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். தங்கும் அனைவரும் இன்டர்நெட் இணைப்பு வேண்டுவதால், இந்த வசதி தரும் விடுதிகளுக்கு முன்னுரிமை தருகின்றனர். அங்கு போன பின்னரே, நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அந்த வை-பி வேலை செய்திடவில்லை என்பது. எனவே, நாமே நம்முடைய வை-பி ரௌட்டரைக் கொண்டு செல்ல வேண்டும். ஈதர்நெட் இணைப்பினை வயர்வழி இணைத்திருக்கும் அறையைக் கேட்டு வாங்கி, அங்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இது போன்ற வசதிகளை மேற்கொள்கையில், நீளமான இணைப்பு தரும் கேபிள்களைக் கையுடன் கொண்டு செல்லுங்கள். அறைகளில் உள்ள ஈதர்நெட் இணைப்பு மிகக் குறைவான நீளமுள்ள கேபிளைக் கொண்டிருக்கும். நீங்களோ படுக்கையில் வைத்து லேப்டாப்பில் இன்டர்நெட் இணைப்பினை மேற்கொள்ள எண்ணுவீர்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு.
4.இன்டர்நெட் வேகத்தை உறுதி செய்திடுங்கள்: நம் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக, பெரிய அளவிலான பைல்களை அப்லோட் செய்திட வேண்டிய திருக்கும். இன்டர்நெட் இணைப்புதான் உள்ளதே என்று, பைல்களை அப்லோட் செய்திட முனைந்தால், அப்லோட் செய்திடும் நேரத்தில் நாமே நம் அலுவலகத்திற்குச் சென்று திரும்பலாம் போலத் தோன்றும். எனவே, பைல்களை அப்லோட் செய்திடும் முன், கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பினை ஒருமுறை சோதனை செய்திடவும்.
5. பாதுகாப்பினைப் பயன்படுத்தவும்: திறந்த வெளியில் வை-பி இணைப்பு கிடைக்கிறதா? சற்று கவனத்துடன் பாதுகாப்பாகச் செயல்படவும். ஹாட்ஸ்பாட் ஷீல்ட் (Hotspot Shield) போன்ற பயன்பாட்டு புரோகிராம் களைப் பயன்படுத்தினால் உங்கள் மெயில் மற்றும் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாளலாம். இதனை எல்லாம், இன்டர்நெட் இணைப்பினை வை-பி மூலம் பெறும் முன்னர் ஏற்பாடு செய்து கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
6.கிளவ்ட் இணைப்பினைத் தள்ளி வைக்கலாம்: கிளவுட் கம்ப்யூட்டிங் முறை வெகு வேகமாகப் பரவி வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் செலவுகளைக் குறைத்திட இந்த முறைக்குத் தாவி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் உங்களுடைய நகல் ஒன்றை, உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வரில் இணைக்கப்படாமலேயே, அலுவலகப் பணிகளை மேற்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
7.பயணத்திட்டத்தில் இன்டர்நெட்: பயணம் ஒன்றை, அலுவலகப் பணிகளுக்கோ, குடும்பத்தினருடனோ அல்லது தனி நபர் சந்தோஷத்திற்காகவோ, மேற் கொள்ளத் திட்டமிடுகையில், மாத்திரைகள், பெர்சனல் ஆடை, உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தயார் செய்வது போல, இன்டர்நெட் இணைப்பினையும் உறுதி செய்து கொள்ளுங்கள். வெளியூர்களில் உறவினர் அல்லது நண்பர் வீடுகளில் தங்கினாலும், விடுதிகளில் தங்கினாலும் அங்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்குமா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். அது போன்ற விடுதிகளிலேயே அறைகளை முன்பதிவு செய்திடவும். உங்களுடன் இன்டர்நெட் இணைப்பு தரும், பழகிய நிறுவனத்தின் டேட்டா கார்டுகளை எடுத்துச் செல்லவும்.

மைக்ரோசாஃப்ட் கிளவ்ட் சேவை இந்தியாவில் துவங்கியது

மைக்ரோசாஃப்ட் கிளவ்ட் சேவை இந்தியாவில் துவங்கியது
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர் நிர்வாகப் பணிகள் சேவையினை தருவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தனிப் பிரிவினை இந்தியாவில் தொடங்கி உள்ளது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை வேகமாகப் பரவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சில, சக்தி வாய்ந்த சர்வர்களை நிறுவி, அதன் மூலம் பல நிறுவனங்களுக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் உற்பத்தி பொருட்கள், அவை குறித்த நுணுக்கமான தகவல்கள், விற்பனை, விற்பனைக்குப் பின் சேவை மற்றும் இவை சார்பாக வாடிக்கையாளர் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனியே சர்வர்களை அமைத்து இயக்குவது அதிக செலவினைத் தரும் வேலையாக அமையும். இவை அனைத்தையும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் பெற்றால், கவலையின்றி இந்த அனைத்து பணிகளையும் குறைந்த செலவில் பெறலாம். இந்த கட்டமைப்பினைப் பெரிய நிறுவனங்கள் சில கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அமைத்துத் தருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் சி.ஆர்.எம். 2011 என்ற பெயரில், இந்த சேவையினை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28 முதல் வழங்க இருக்கிறது. முதலில் வரும் வாடிக்கை நிறுவனங்களுக்கு பல சலுகைகளை மைக்ரோசாப்ட் வழங்கு கிறது. பிற நிறுவனங்கள் மூலம் இந்த சேவையினைப் பெற்று வருபவர்கள், மாற்றிக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கும் பல தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு http://www.cloudcrmforless.com என்ற இணைய தள முகவரியில் உள்ள பக்கத்தைக் காணலாம்.

என்ன வரப்போகிறது ?-லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழா

என்ன வரப்போகிறது ?-லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழா
லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசியது 4ஜி அலைவரிசை தொடர்பு குறித்துத் தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலைவரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பு பெற முடியும். மிகக் குறைந்த வேக இணைப்பு கூட விநாடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் இருக்கும்.
அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளே புக் டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐ-பேட் சாதனத்தைக் காட்டிலும் 400 கிராம் குறைவான எடையில், 7 அங்குல அகலத் திரையுடன் இயங்கியது. இதே போலக் கவனத்தை ஈர்த்த இன்னொரு சாதனம் டெல் ஸ்ட்ரீக் 7 (Dell Streak 7) டேப்ளட் பிசி. டெல் நிறுவனத்தின் 4ஜி திறன் கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 2.2 இயக்கத்தில் செயல்படுகிறது. இதில் உள்ள கொரில்லா கிளாஸ் டச் ஸ்கிரீன் திரை, வேறு எதனையும் பக்கத்தில் கூட ஒப்பிட விடுவதில்லை. இந்தியாவில் 2ஜி வரலாற்றினையும், 3ஜி முழுமையாக உண்டா என்று அறியாத நிலையையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடைகள் நீங்கி 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் சேவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
2. முப்பரிமாண டிவி: பலரின் கண்கள் அதிகம் மொய்த்த அடுத்த சாதனம் முப்பரிமாண “டிவி’. இதனை கண்ணுக்கு ஸ்பெஷல் கண்ணாடி போட்டு பார்க்க வேண்டியதில்லை. சோனி நிறுவனம் இத்தகைய ஒரு “டிவி’யினைக் காட்டியது. இவற்றுடன் 27 புதிய எச்.டி.டி.வி. (HDTV) மாடல்களும் காட்டப்பட்டன. இவற்றில் 16 “டிவி’க்கள், முப்பரிமாண படத்தைக் காட்டக் கூடியன.
ஐஸ்டேஷன் (iStation) என்னும் நிறுவனம் ஸூட் (Zood) என்னும் டேப்ளட் பிசியைக் காட்டியது. முப்பரிமாணக் காட்சியைக் காட்டும் திரை இதன் சிறப்பாகும். அது மட்டுமின்றி 2டி யிலிருந்து 3டிக்கு (2D to 3D) மாற்றும் தொழில் நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.
சில “டிவி’க்கள் நமக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தருவதாகவும் இருந்தன. தற்போது வேகமாகப் பரவி வரும் திரைகள் மூலம் டிவிக்களை மிக மிக ஸ்லிம்மாக வடிவமைப்பது எளிதாகிறது. இந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் 2.9 மிமீ மட்டுமே தடிமன் கொண்ட “டிவி’ ஒன்றை அறிமுகப் படுத்தியது. இதே போன்ற வேறு பல “டிவி’க்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சாம்சங் நிறுவனம் ப்ளாஸ்மா “டிவி’ திரை கொண்ட 16 “டிவி’க்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் ரெசல்யூசன் என்ற அளவில் இருப்பது ஒரு சிறப்பாகும்.
“டிவி’க்களின் தடிமன் சிறிய அளவில் குறையும் போது, திரையின் அகலம் அதிகமாகி வருவது வழக்கமாகி வருகிறது. எல்.ஜி. மற்றும் ஷார்ப் நிறுவனங்கள் 72 அங்குல எல்.இ.டி. திரை கொண்ட “டிவி’க்களில் பல மாடல்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் பல முப்பரிமாண காட்சிகளைக் காட்டும் “டிவி’க்களாகும்.

பவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற

பவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற
பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட்டுடன் ஆப்ஜெக்ட்கள் எனப்படும் கூடுதல் படங்கள், உருவங்களை வைக்கிறோம். இவற்றை நம் விருப்பப்படி சுழற்றி குறிப்பிட்ட கோணத்தில் வைக்க முயற்சிப்போம். ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்து வலது புறமாகச் சாய்த்து வைக்க முயற்சிக்கையில், நாம் எதிர்பார்க்கும் வழியில் அமையாமல் அது செல்லலாம். இதனைத் தவிர்த்து நம் விருப்பப்படி அவற்றை அமைப்பதற்குத் தேவையான வழிகளை இங்கு காணலாம்.
1. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்டைச் சுழற்ற முயற்சிக்கையில், ஷிப்ட் (Shift) கீயை அழுத்தியவாறு இருந்தால், 15 டிகிரி அளவில் அவற்றைத் துல்லியமாகச் சுழற்ற முடியும்.
2. பார்மட் டேப்பில் Rotate in the Arrange group என்பதில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நிலையில் சுழற்ற வழி கிடைகும். பவர்பாய்ண்ட் 2003ல், பிக்சர் டூல்பாரில் Rotate என்பதில் கிளிக் செய்தால், இந்த விளைவினை மேற்கொள்ளலாம்.
3. குறிப்பிட்ட ஆப்ஜெக்டை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது பார்மட் டேப் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் குடித்ஞு Size group-ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது புறம் உள்ள பிரிவில், Size மீது கிளிக் செய்திடவும். இதில் உள்ள Rotation control –ல், சுழலுவதற்கான எண் மதிப்பை(value)த் தரவும். இந்த வேல்யூ + ஆக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியில் இருக்கும். அதுவே – மதிப்பாக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியின் எதிர்புறமாக இருக்கும். இதனையே 0 ஆகக் கொள்கையில், ஆப்ஜெக்ட் அதன் பழைய நிலையில் தக்க வைக்கப்படும். (சுழலுவதற்கான ஹேண்டிலுடன் போராடுவதற்கு இதி எளிதல்லவா!). இத்துடன், எந்த அளவில் சுழற்சியை மேற்கொண்டாலும், அதனை நீக்க, [Ctrl]+Z கீகளை எப்போதும் அழுத்தலாம்.
4. மிர்ரர் இமேஜ் வேண்டும் எனில், ஆப்ஜெக்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Format object என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு குடித்ஞு Size group -ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு 3D Rotation என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் X மதிப்பை 180 எனத் தரவும். பின்னர் இடூணிண்ஞு என்பதில் கிளிக் செய்தால், உடன் மிர்ரர் இமேஜ் கிடைக்கும்.

தேசிய பிராட்பேண்ட் திட்டம்

தேசிய பிராட்பேண்ட் திட்டம்
தொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட்பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக்கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக்காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI)கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட்பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர்நெட் இணைப்புகளை வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் தரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டேட் ஆப்டிகல் பைபர் ஏஜென்சீஸ் State Optical Fiber Agencies அமைக்கப்படும். இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். இவற்றை இணைக்கும் வகையில் தேசிய ஆப்டிகல் பைபர் ஏஜென்சி National Optical Fiber Agency (NOFA)ஒன்று மத்திய அரசின் அமைப்பின் கீழ் இயங்கும்.
நகரங்களில் 10 Mbps வேகத்தில் இணைய இணைப்பு தரப்படும். இதற்கான உரிமங்களை ரிலையன்ஸ் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவை முறையே மும்பை மற்றும் குர்கவான் நகரங்களில் 4ஜி சேவையை சோதனை முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டன. இது வர்த்தக ரீதியில் 2012 ஆம் ஆண்டில் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் சென்றால், பிராட்பேண்ட் பெரும் அளவில் மக்களிடையே பரவத் தொடங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?
டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
கம்ப்யூட்டரின் உயிர்
நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?
உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, “டிவி’ போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.
குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.
நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது?
கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்
எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் – ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் – பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

இன்டர்நெட் எக்ஸ்புவோரர் பதிப்பு 9 – புதிய கூடுதல் வசதிகள்

இன்டர்நெட் எக்ஸ்புவோரர் பதிப்பு 9 – புதிய கூடுதல் வசதிகள்
முழுமையாக வெளி வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இறுதிச் சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளி யானது. இதனை ஆங்கிலத்தில் Release Candidate என்று சொல்வார் கள். ஏற்கனவே சோதனைத் தொகுப்புகள் வந்த போது அவற்றைப் பயன்படுத்தி, அதில் காணப்பட்ட புதிய அம்சங்களை சென்ற செப்டம்பர் 27 மற்றும் ஜனவரி 10 கம்ப்யூட்டர் மலரில் பட்டியலிட்டி ருந்தோம்.
புதியதாக வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பினை அடுத்து புதிய தொகுப்பு இறுதியானதாகக் கிடைக்கும். எனவே பெரும்பாலும் இதில் உள்ள வசதிகளே அதில் இருக்கும். இந்த இறுதிச் சோதனைத் தொகுப்பில் பல புதிய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம். அனைத்து வசதிகள் குறித்தும் நீங்கள் அறிய வேண்டும் என்றால், http://www.beautyoftheweb.com/#/ new_in_rc என்ற முகவரியில் உள்ள இணையதளத்தினைக் காணவும்.
1.முதலாவதாக, உங்கள் மனதில் எழும் கேள்வி – இதனை நான் என் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிப் பார்க்க வேண்டுமா என்பதுதான். நிச்சயமாக. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாதவராக இருந்தாலும், இதில் உள்ள வசதிகள் குறித்து அறிய, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். இது மிக மிக பாதுகாப்பான ஒரு பிரவுசராகும்.
2. இயங்கும் செயல்திறன் வேகம் கூட்டப்பட்டுள்ளது: இந்த வகையில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜிமெயில் போன்ற அதிக தகவல்களைக் கொண்டுள்ள ஓர் இணைய தளத்துடன் பிரவுசர் இயங்குகையில் இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அதற்கேற்ற வகையில் திறன் கூட்டப்பட்டுள்ளது.
3. மின் சக்தி பயன்பாட்டினை வரையறை செய்தல்: அனைத்து பிரவுசர்களும் இப்போது ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது சி.பி.யு வின் சக்தியை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த பயன்பாடு இப்போது பவர் செட்டிங்ஸ் மெனுவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், பேட்டரியில் நீங்கள் பிரவுசரை இயக்குகையில், சிபியுவின் சக்தி குறைவாகவே பயன்படுத்தும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதனால் பேட்டரியின் திறன் வீணாவது தடுக்கப்படுகிறது. இது உண்மையிலேயே புதியதொரு மாற்றம் தான்.
4. யூசர் இன்டர்பேஸ் மாற்றங்கள்: பயனாளருக்கும் பிரவுசருக்குமான இடைமுகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டேப் பாரினை, அட்ரஸ் பாருக்குக் கீழாக அமைக்கலாம். முன்பு அனைத்தும் ஒரே வரிசைய்ல் இருந்ததனால், டேப்கள் மிகவும் சிறிய பட்டன்களாக இருந்தன. இப்போது, டேப் பாரில் ரைட் கிளிக் செய்தால், அது தனி வரிசையாக இடம்பெறுகிறது. இரண்டு வரிசையாக இவை இடம் பெற்றாலும், மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில், இவை குறைந்த இடமே எடுத்துக் கொள்கின்றன. பிக்ஸெல்பவர் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மெனு பாரினை உடனுடக்குடன் தேவைப்படும்போது தெரியும் வகையிலும் வைத்துக் கொள்ளலாம்; மறைத்துக் கொள்ளலாம்.
5. பின் செய்யப்படும் தளங்கள்: டாஸ்க் பாரில் ஒரு பட்டனில், எத்தனை தளங்களை வேண்டுமானாலும் இருத்தி வைத்துக் கொள்ளலாம். இதனால் நாம் மொத்தமாக சேர்த்துத் திறந்து பார்க்க விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை ஒரே கிளிக் மூலம் திறந்து பார்த்துக் கொள்ளலாம்.
6. பிளாஷ் மற்றும் விளம்பர தடை: இதில் புதிய ஆக்டிவ் எக்ஸ் பில்டரிங் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஷ் இயக்கம் மற்றும் விளம்பர தடைகள் இணைந்து தரப்பட்டுள்ளன. நீங்கள் பாதுகாப்பானது என நம்பும் தளங்களுக்கு மட்டும் ப்ளக் இன் புரோகிராம்களை இயக்குமாறு செய்திடலாம். மேலும் விளம்பரங்கள், அவற்றின் தன்மை உணரப்பட்டு தடை செய்யப்படுகின்றன.
7. இயங்கும் இடம் அறிதல்: தங்களைப் பற்றிய எந்த தனி தகவலும் வெளியாகக் கூடாது என்று எண்ணுபவர்களுக்கு இந்த வசதி எரிச்சல் ஊட்டுவதாய் அமையும். ஆனால் இதில் சில குறிப்பிடத்தக்க வசதிகளும் உள்ளன. நீங்கள் பயணத்தில் இருக்கையில், லேப்டாப் பயன்படுத்து பவராக இருந்தால், சில இடங்கள் குறித்து அறிந்து கொள்ள இது உதவும். குறிப்பாக, கூகுள் மேப்ஸ் பயன்படுத்துகையில் இதன் செயல்பாடு நம் இணையப் பயன்பாட்டினை அர்த்தமுள்ளதாக அமைக்கும். ஆனால் இது குறித்து கவலைப்படவும் தேவையில்லை. நம் தனி நபர் தகவல்களை வெளியே விடாத வகையில் இதனை செட் செய்திடலாம்.
8. வெப் எம் வீடியோ: கூகுள் அண்மையில் தன் குரோம் பிரவுசரிலிருந்து எச். 264 வீடியோ தன்மையை எடுத்தது. ஆனால் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், கூகுள் நிறுவனத்தின் வெப் எம் (WebM) வீடியோ பார்மட்டினை இணைத்துள்ளது.
இந்த வசதிகள் குறித்து படித்தறிகையில் பல வாசகர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது குறித்துப் பல சந்தேகங்கள் எழலாம். அவற்றில் சில கீழே தீர்க்கப்பட்டுள்ளன.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குமா?
இயங்காது.
2. ஏற்கனவே ஒரு சோதனைத் தொகுப்பு ஒன்றைப் பதிந்து இயக்கி வருகிறேன். புதிய தொகுப்பினை, அதனை அழித்துவிட்டுப் பதிய வேண்டுமா? அதன் மேலாகவே பதியலாமா? அல்லது கூடுதலாகத் தனியே, வேறுஒரு ட்ரைவில் பதியலாமா?
பழைய சோதனைப் பதிப்பின் மேலேயே பதிந்து இயக்கலாம்.
3. விண்டோஸ் இயக்கத்தில் 32/64/128 பிட் இயக்கங்கள் என வேறுபட்ட இயக்கத் தொகுப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9 உள்ளதா?
உங்களுடைய விண்டோஸ் இயக்கம் எத்தனை பிட் இயக்கம் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற பிரவுசர் பதிப்பினையே பதிந்து இயக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் 32 பிட் பதிப்பு இருந்தால், விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 32 மட்டுமே பதிந்து இயக்க வேண்டும். http://www.beaut yoftheweb.com/#/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால், உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பதியலாம்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! மவுஸ் ஏன்? எதற்காக?

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! மவுஸ் ஏன்? எதற்காக?
கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில் ‘leftclicking’ எனக் கூறுகின்றனர். ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவுஸின் அம்புக் குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்படுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.
இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை அதற்கான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும்.
ஒரு முறை கிளிக் செய்து அப்படியே பட்டனை விடாமல் மவுஸை இழுத்தால் நாம் தேர்ந்தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும். அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று பட்டனை அழுத்துவதிலிருந்து எடுத்துவிட்டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர்ந்துவிடும்.
டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகிறோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம்.
வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன்றைக் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும். அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செயல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும். அவை: =
Open: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரிவில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்;
Cut: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்குவதற்கு;
Copy: இதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம்.
Create Shortcut: குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்கு வழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவாக்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம்; பைலை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.
Delete: நிரந்தரமாக நீக்கிட; Rename: பைல் அல்லது புரோகிராமிற்குப் புதிய பெயர் தர. மற்றும் Properties: பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மைகளை அறிய இது உதவுகிறது.
மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள். டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லுவோம். அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலையை எளிதாக மேற்கொள்ள இந்த வீல் உதவுகிறது. இதனுடைய பல சிறப்பு பயன்பாடுகள் குறித்து அந்த அந்த சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான டிப்ஸ்களில் பார்க்கலாம்.
வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய வயர்லெஸ் மவுஸ் வெகு நாட்களாகப் புழக்கத்தில் உள்ளது. அதன் பயன்பாடுகளும் மேலே குறிப்பிட்டபடி தான் இருக்கும்.

நாள் – கிழமை செட் செய்திடலாம்

நாள் – கிழமை செட் செய்திடலாம்
நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வசதிகளையும் தந்து விடுகின்றனர். எம்.எஸ்.எக்ஸெல் தொகுப்பில் நாள் மற்றும் கிழமையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த செல்களில் தேதிக்கான பார்மட் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Format மெனு சென்று Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் Format Cells டயலாக் விண்டோவில் Number டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் சில டேட்டா வகைகள் (categories) தரப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் Custom என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது பக்கம் Type என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் விருப்பப்படி தேதியை பார்மட் செய்வதற்கு வசதி உள்ளதா எனப் பார்க்கவும். இங்கு Date என்ற பிரிவு கிடைக்கும். இந்த பிரிவில் செல்லும் முன் தேதியை எப்படி எல்லாம் அமைப்பது என்று தெரிந்து கொள்வோம். அதற்கான குறியீடுகளைப் பார்க்கலாம். d என்பது தேதியின் எண்ணைத் (1,2,3 …. 31) தரும். dd என்பது தேதியை இரண்டு இலக்கங்களாகத் (01,02,03 ..31) தரும். ddd என்பது கிழமையினைச் சுருக்கித் (Mon, Tue . . .) தரும். dddd என்பது நாளினை முழுமையாகத் தரும்.
மாதங்கள் பெயரை அமைக்கும் குறியீடுகள்: m என அமைத்தால் மாதத்தின் எண் (1, 2, 3 … 11, 12) கிடைக்கும். mm என்பது மாதங்களின் எண்களை (01, 02 … 12) இரு இலக்கத்தில் தரும். mmm என்பது மாதத்தின் பெயரைச் (Jan, Feb) சுருக்கித் தரும். மாதங்களின் பெயரை முழுமையாகப் (January, February) பெற mmmm என அமைக்க வேண்டும். மாதத்தின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் பெற mmmmm என அமைக்க (J, F, M, A) வேண்டும்.
ஆண்டுகளை எப்படி அமைப்பது? yy என்பது ஆண்டுகளை இரு இலக்கங்களில் (07, 08) குறிக்கும். yyyy என அமைத்தால் ஆண்டுகள் 4 இலக்கங்களில் முழுமையாகக் கிடைக்கும்.
சரி, குறியீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனி இவற்றின் துணை கொண்டு நாள், கிழமையை எப்படி அமைப்போம் என்று பார்ப்போம். வகைகளைப் பார்க்கையில் Custom என்பதில் கிளிக் செய்தீர்கள் அல்லவா? அப்போது வலது பக்கம் Type என்பதன் அருகே தேதிக்கான பார்மட் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இதில் மேலே தரப்பட்ட குறியிடுகளைக் கலந்து அமைத்தால் நமக்கு தேவையான வடிவமைப்பில் நாள் மற்றும் கிழமை கிடைக்கும். எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என அமைத்து அந்த செல்லில் 52611 என டைப் செய்தால் Thursday, May 26, 2011 எனக் கிடைக்கும். ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். பார்மட்டில் டைப் செய்யப்படும் டேட்டாக்களைப் பிரிக்க ஸ்பேஸ் மற்றும் கமா அமைத்தால் அவை அப்படியே காட்டப்படுகின்றன. இந்த இடத்தில் சிறிய இடைக்கோடு ( – ஹைபன்) நெட்டு சாய்வு கோடு (/ ஸ்லாஷ்) போன்றவற்றையும் அமைக்கலாம். இதனை அமைக்கையில் அருகே Sample என்ற கட்டத்தைப் பார்க்கலாம். இதில் டேட்டா எப்படி அமையும் என்ற முன் மாதிரி காட்டப்படும். இந்த சாம்பிள் டைப் பீல்டுக்கு மேலே இருக்கும். இந்த வகை அமைப்பை அமைத்திடுகையில் அதற்கான செல்லில் டேட்டா இருந்தால் நீங்கள் பார்மட்டை அமைக்கையிலேயே அதற்கேற்றார்போல் அது மாறுவதைக் காணலாம்.
நாளும் கிழமையும் எக்ஸெல்லில் அமைப்பதைக் கற்றுக் கொண்டீர்களா. நல்லது. அனைவருக்கும் நாளும் கிழமையும் நல்லதாக அமையட்டும்.

2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?

2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று பார்க்கலாம்.
கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய வசதிகள், புதிய பதிப்புகளை விரைவில் கொண்டு வருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், இப்போதைய இணைய வரையறைகளை ஒட்டி இயங்குவதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்துள்ளது. வேகத்தைக் கூட்டுவதிலும் ஆர்வம் காட்டுவதுடன், யூசர் இன்டர்பேஸ் விஷயத்திலும் அக்கறை காட்டுகிறது.
மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில், யூசர் இன்டர்பேஸ் முழுமையாக மாற்றப்படுகிறது. புதிய பதிப்புகளை உடனுக்குடன் கொண்டு வருகிறது. ஆப்பரா தொகுப்பு புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அடிப்படையில் வேகமாக இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.
சபாரி தொகுப்பில் புதிய வசதிகளும், எக்ஸ்டன்ஷன்களும் தரப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் அடிப்படையில் மக்கள் மனதில் வெற்றி பெற இருப்பதாக உள்ள பிரவுசர் எது என்று பார்ப்போமா!
1.கூகுள் குரோம் 47.27% (1,032 வாக்குகள்)
2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.97% (174 வாக்குகள்)
3. மொஸில்லா பயர்பாக்ஸ் 36.92% (806)
4. ஆப்பரா 6.6% (144)
5.சபாரி 0.92% (20)
6. மற்றவை 0.32% (7)
இந்த அடிப்படையை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் பிரவுசர் கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரவுசர்கள் மாற்றம் குறித்த செய்திகள், சோதனைத் தொகுப்புகளின் புதிய வசதிகள் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன என்ற கணக்கினைக் காட்டுவதாகவே எண்ண வேண்டும். இதுவும் வாரா வாரம் மாறலாம்.

டிஜிட்டலாகும் நினைவுகள்

டிஜிட்டலாகும் நினைவுகள்
நம் வாழ்க்கையின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிட்டலாகி வருகின்றன. நினைவுகளைத் தாங்கி நிற்கும் படங்கள், போட்டோக்கள் ஆகியன இதில் முதலிடம் பெறுகின்றன. இவற்றை டிஜிட்டலாக்குவது மிக எளிமையான ஒரு பணியாகக் கம்ப்யூட்டர் மூலம் நிறைவேறி வருகிறது. முன்பெல்லாம் சித்திரங்கள் வரையப்பட்டு அதில் சிருங்கார வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது டிஜிட்டல் பைல்களாக படங்கள் எடுக்கப்பட்டு, அவற்றை நம் விருப்பங்களுக்கேற்ப நகாசு வேலைகளை மேற்கொள்கிறோம். படங்களையே மாற்றி அமைக்கிறோம். இந்த போக்கின் அடிப்படை வசதிகளை இங்கு காணலாம்.
முதலில் கம்ப்யூட்டரில் படங்கள் எந்த எந்த பார்மட்களில் உருவாக்கப்படுகின்றன என்று பார்க்கலாம்.
1. பி.எம்.பி. (BMP Bit Map) பைல் பார்மட்டாகும். இது முன்னாலேயே வரையறை செய்யப்பட்ட வகையில் உருவாக்கப்படும் பார்மட். இந்த வகையிலான பார்மட் படம் எப்படி டிஸ்பிளே செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில் அல்லாமல், படத்திற்கேற்ற வகையில் பிக்ஸெல் மற்றும் கலர் ஆழம் அமைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தன்மைகளில் இது உருவாகிறது. இதன் அனுகூலம் என்னவென்றால் இதனைப் பல சாப்ட்வேர் தொகுப்புகளில் நம் விருப்பப்படி பயன்படுத்தலாம்.
2. JPG (Joint Photographic Expert Group) என்பது இரண்டாவது வகை. கிராபிக் டேட்டா மற்றும் படங்களை டிஜிட்டல் நெட்வொர்க்குகளில் பரிமாறுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பார்மட். இதற்கு முந்தைய பி.எம்.பி. மற்றும் டிப் (TIFF) ஆகிய பார்மட்டில் அமைந்த படங்கள் கொண்ட பைல்களை கம்ப்ரஸ் செய்திடுகையில் டேட்டாவை சிறிது இழக்க நேரிடும். ஆனால் ஜேபெக் பைல் பார்மட்டில் இழப்பு ஏற்படாது. எனவே நெட்வொர்க்கிங்கில் பைல் பரிமாற்றத் திற்கு மிக மிக ஏற்ற பார்மட்டாக இன்றும் இது கருதப்படுகிறது. ஜேபெக் இமேஜ்களை மீண்டும் மேம்படுத்த முடியாது.
3. GIF (Graphics Image Format): Compuserv Inc நிறுவனத்தால் இன்டர்நெட் தளங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பார்மட். படங்களை இன்டர்நெட் தளங்களில் புகுத்துவதற்கு படங்கள் இந்த பார்மட்டில் இருப்பது வேலையை எளிதாக்கும். இதனை கம்ப்ரெஸ் செய்திடுகையிலும் டேட்டா இழப்பு நேரிடாது. பெரிய அளவிலான இமேஜ் பைல்களுக்கு இந்த பார்மட் உகந்தது.
4. PCX பார்மட்: பயன்படுத்த மிகவும் வகையான இமேஜ் பார்மட். முதலில் டாஸ் இயக்கத்தில் இயங்கிய பி.சி. பெயிண்ட் பிரஷ் என்னும் சாப்ட்வேர் தொகுப்புக்கென இந்த பார்மட் உருவானது. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதன் உரிமையை வாங்கி விண்டோஸ் சாப்ட்வேர்களுக்கும் இதனை மாற்றியது. கிராபிக் டேட்டாவை பாதுகாத்து வைத்திடவும் டெஸ்க்டாப் பப்ளிஷிங் சிஸ்டத்தில் பயன்படுத்தவும் இந்த பார்மட் உகந்தது.
5. TIFF (Tagged Image File Format): ஆல்டஸ் நிறுவனத்தின் தலைமையில் சில நிறுவனங்கள் சேர்ந்து இந்த பைல் பார்மட்டை உருவாக்கின. டெஸ்க் டாப் பப்ளிஷிங் சிஸ்டத்தில் கலர் மற்றும் கிரே வண்ணத்திலான படங்களைக் காட்ட இந்த பார்மட் பயன்படுகிறது.
6. PNG: இந்த பார்மட் அண்மைக் காலத்திய வடிவமைப்பு. பார்மட் புழக்கம் இழந்த நிலையில் அதன் இடத்தில் இந்த பார்மட் கொண்டு வரப்பட்டது. நெட்வொர்க் இணைப்புகளில் பயன்படுத்த உகந்தது. இதனைக் கம்ப்ரஸ் செய்திடுகையில் டேட்டா இழப்பு ஏற்படாது.
7. WMF: விண்டோஸ் அல்லாத அப்ளிகேஷன்களால் விண்டோஸ் அப்ளிகேஷன்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு இந்த பார்மட் பயன் படுகிறது. எனவே இது ஒரு பொதுவான பார்மட்டாகக் கருதப்படுகிறது. இது அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
படங்கள் பரிமாற்றம்: படங்கள் உருவானவுடன் அவற்றிற்கு பொலிவு சேர்க்க கம்ப்யூட்டருக்கு மாற்றப்பட வேண்டும். முதலில் படங்களை உருவாக்கும் சாதனங்களைப் பார்க்கலாம். டிஜிட்டல் கேமரா அந்த வகையில் முதல் இடம் பெறுகிறது. ஒளித் தூண்டுதல்களுக்கு உள்ளாகக் கூடிய சென்சார்களில் படங்களைப் பதிக்கும் வேலையை டிஜிட்டல் கேமரா மேற்கொள்கிறது. இந்த சென்ஸாரின் அளவு,லென்ஸின் தன்மை, பிக்ஸெல் அமைப்பு ஆகிய மூன்று தான் அடிப்படையில் இமேஜ் ஒன்றின் தன்மையை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் படங்களை கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் பிற சாதனங்களுக்கு மாற்றுவதற்கு யு.எஸ்.பி. டிரைவ் போன்ற பல டிஜிட்டல் சாதனங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த படங்கள் மாற்றப்படுகின்றன. இவை அனைத்திலும் PTP Picture Transfer Protocol என்னும் வழி பின்பற்றப்படுகிறது.
படங்களை உருவாக்கி தருவதில் ஸ்கேனர்களும் பயன்படுகின்றன. படங்கள், அச்சடிக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது கையெழுத்துப் பிரதி அல்லது ஒரு ஆப்ஜெக்ட் (நகையணி) போன்றவற்றை அலசிப் பார்த்து டிஜிட்டல் இமேஜ் பார்மட்டில் தரும் வேலையை ஸ்கேனர்கள் மேற்கொள்கின்றன. இந்த படங்களும் மேலே கூறப்பட்ட பார்மட்டுகளில் டிஜிட்டல் இமேஜ்களை அளிக்கின்றன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் இமேஜ்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றியபின் அவற்றைச் சரி செய்து பொலிவூட்டும் பணி கம்ப்யூட்டரில் நடைபெறுகிறது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இங்கு காணலாம். இவ்வகைப் பணிகளுக்குப் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இருந்தாலும் அனைத்திற்கும் முதன்மையாய் அனைத்து வசதிகளும் கொண்டு இயங்குவது அடோப் போட்டோ ஷாப் சாப்ட்வேர் தொகுப்புதான்.
1. கிராப்பிங்: (Cropping): ஒரு டிஜிட்டல் இமேஜை வலுப்படுத்தவும் குறிப்பிட்ட நிலைக்கு முக்கியத்துவம் அளித்திடும் நோக்கத்துடன் தேவையற்ற பகுதிகளை நீக்குதலே கிராப்பிங் ஆகும்.
2. ரீசைஸிங்: (Resizing) இமேஜின் உயரம், அகலம் மற்றும் அதனை உருவாக்கியவற்றின் விகித நிலையை மாற்றி அமைத்தலே ரீசைஸிங் பணியாகும்.
3. ரொடேட்டிங்: (Rotating) இது இமேஜை சுழற்றி வைத்திடும் பணியாகும். இது முழு படத்தையும் சுழற்றும். தனி ஒரு லேயரை மட்டும் எடுத்துக் கொள்ளாது.
4. இமேஜ் வண்ணங்கள்: பலவகையான வண்ணக் கலவைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. CMYK, Lab Color, Bitmap Color, Indexed Color, Duotone Color, Multichannel Color என்ற பலவகை வண்ணக் கலவைகளை இமேஜ்களில் மேற்கொள்ளலாம். படத்தினை எதற்கு எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதே இவற்றைத் தீர்மானிக்கின்றன.
5. ரெட் ஐ ரிமூவல்: (Red Eye Removal) டிஜிட்டல் போட்டோ எடுக்கையில் பயன்படுத்தப்படும் பிளாஷ் கண்களில் பட்டு ஒளி மீண்டும் கேமராவை அடையும்போது கண்களின் மீது சிகப்பு சிறிய வட்டம் ஏற்படும். இதனை நீக்குவதே இந்த பணி. இதனை சில கேமராக்களில் முதலிலேயே தடுத்து விடலாம். இல்லையேல் சாப்ட்வேர் தொகுப்பின் துணையுடன் எடுத்துவிடலாம்.
6. நாய்ஸ் ரிமூவல்: (Noise Removal) போதுமான ஒளி இல்லாத வேளைகளில் படம் எடுக்கும் போதும் தூசுகள் அதிகம் எழுந்து வரும்போது படம் எடுக்கப் போதும் தெளிவில்லாத படம் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்து படங்களுக்குப் பொலிவு ஊட்டுவதனை நாய்ஸ் ரிமூவல் என்கிறார்கள். இதனையும் சாப்ட்வேர் துணை கொண்டு மேற்கொள்ளலாம்.

இன்டர்நெட்டில் புதுப்பாதை

இன்டர்நெட்டில் புதுப்பாதை
இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது. தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது.
ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது. இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும். ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும். IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன. ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.
இந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.
வீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன. வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும். இந்த தகவல்களை ஆசிய பசிபிக் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டரின் முன்னால் செயல் இயக்குநர் குசும்பா தெரிவித்தார்.
அரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.
விரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்.

டேப்ளட் பிசி-க்குத் தயாராவோம்

டேப்ளட் பிசி-க்குத் தயாராவோம்
சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது.இந்த 2011 ஆம் ஆண்டில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூட்டரில் உள்ள சிறப்பம்சங்களைக் கூறி விளம்பரப்படுத்தத் தொடங்கி விட்டனர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விளம்பரங்களால் ஒரு குழப்பமான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை எல்லாம் பார்த்து, கவனித்து, ஆய்வு செய்து, பின்னர் நம் பட்ஜெட்டிற்குள்ளாக, ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
1. ப்ராசசர் (Processor): வழக்கம்போல, எந்த ஒரு கம்ப்யூட்டரிலும் ப்ராசசர் மற்றும் அதன் இயங்கும் வேகமே மிக முக்கியம். இதனைச் சுற்றியே நம் கம்ப்யூட்டர் இயக்கம் இருக்கப் போவதால், இதன் திறனை முதல் அம்சமாக நாம் கவனிக்க வேண்டும். தற்போது உள்ள பட்டயக் கம்ப்யூட்டர்கள் அனைத்துமே குறைந்தது 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்களைக் கொண்டுள்ளன. எச்.பி. நிறுவனம், தன் டச் பேட் கம்ப்யூட்டரில், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் நிறுவன ப்ராசசரைக் கொண்டுள்ளது. ப்ராசசரைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களாகப் பரவலாக, ஆப்பிள், என்-விடியா, ஏ.ஆர்.எம்., இன்டெல் மற்றும் குவால்காம் ஆகியவை முன்னணியில் உள்ளன. என் -விடியாவின் டெக்ரா 2 ப்ராசசரை, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
2. டிஸ்பிளே (Display): கைக்கு அடக்கமாக, சிறிய அளவில் ஒரு பட்டயக் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என நாம் விரும்பினாலும், நம் கம்ப்யூட்டர் பணிகளுக்கு ஓரளவிற்கு திரையின் அளவினை எதிர்பார்க்கிறோம். 7, 8.9, 9.7, 10.1, 12.1 அங்குல அளவுகளில் டிஸ்பிளே திரைகளைக் கொண்டு, இந்த நிறுவனங்கள் இக்கம்ப்யூட்டர்களை வடிவமைத்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. Eee Slate EP 121 கம்ப்யூட்டரில் திரை 12.1 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இதில் இவற்றின் ரெசல்யூசன் அளவையும் நாம் ஒப்பிடலாம். 800×480 என்பதில் தொடங்கி 1280×800 வரை இக்கம்ப்யூட்டர் திரைகளின் ரெசல்யூசன் உள்ளது.
3. ராம் நினைவகம் (RAM): ஆப்பிள் நிறுவனம் தன் கம்ப்யூட்டரில் 256 எம்பி நினைவகத்தினைக் கொண்டிருந்தாலும், இப்போது இந்த சந்தையில் வரும் பிற நிறுவனங்களின் கம்ப்யூட்டரில் 1ஜிபி ராம் நினைவகம் தொடக்க நிலையாகவே அமைக்கப்படுகிறது. EP121 கம்ப்யூட்டரில் 2 ஜிபி நினைவகம் உள்ளது. இனி அடுத்து வரும் பட்டயக் கம்ப்யூட்டர்களில் இவை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
4. கேமரா (Camera): இந்த வகைக் கம்ப்யூட்டர்களில் இரண்டு கேமராக்கள் தரப்படுகின்றன. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் இவை அமைக்கப்படுகின்றன. வீடியோ சேட்டிங் என அழைக்கப்படும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியாகவும், போட்டோ எடுத்து உடனடியாக அனுப்பவும் இவை உதவுகின்றன. ஆப்பிள் ஐ-பேட் கம்ப்யூட்டரில் எதுவும் இல்லை. மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் கூடுமான வரை இரண்டு கேமராக்கள் உள்ளன. முன்பக்க கேமரா 1.3 எம்.பி முதல் 3.2 எம்பி வரை திறன் கொண்டதாகவும், பின்புறமுள்ள கேமரா 3.2 எம்பி முதல் 5 எம்பி வரை திறன் கொண்டதாகவும் அமைந்துள்ளன. எச்.பி. டச்பேட் மற்றும் இ.பி. 121 கம்ப்யூட்டர்களில் பின்புறக் கேமரா தரப்படவில்லை.
5. ஹார்ட் டிஸ்க் (Storage): தகவல்களைத் தேக்கி வைத்து இயக்க கம்ப்யூட்டரில் நாம் அதிக அளவில் கொள்ளளவு திறன் கொண்ட டிஸ்க்குகளை எதிர்பார்க்கிறோம். ஆப்பிளின் ஐ-பேட் இந்த வகையில் 16, 32 மற்றும் 64 ஜிபி திறன் கொண்ட கம்ப்யூட்டர்களை வெளியிட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் 16 மற்றும் 32 ஜிபி கொள்ளளவுடன் இவற்றை வடிவமைத்துள்ளன.
6. யு.எஸ்.பி (U.S.B): துணை சாதனங்களை இணைக்க யு.எஸ்.பி. ட்ரைவ்களை மட்டுமே நாம் நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விரும்புகிறோம். ஸ்மார்ட் போன்களிலும் இவை கட்டாய மாக அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் ஆப்பிள் தன் ஐ-பேட் சாதனத்தில் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவ் கூடத் தரவில்லை. அதே போல டெல் நிறுவனத்தின் ஸ்ட்ரீக் கம்ப்யூட்டரிலும், யு.எஸ்.பி. ட்ரைவ் தரப்படவில்லை. மற்ற நிறுவனங்களின் பட்டயக் கம்ப்யூட்டர்களில் இவை தரப்பட்டுள்ளன.
7. வயர்லெஸ் இணைப்பு (Wireless Connectivity): மற்றவர்களுடன் நெட்வொர்க் கில் இணைந்து தொடர்பு கொள்வது, இத்தகைய கம்ப்யூட்டர்களில் முக்கிய செயல்பாடாக உள்ளது. எனவே இந்த கம்ப்யூட்டர்களில் தரப்படும் வயர்லெஸ் இணைப்பு வகை மற்றும் திறன், இவற்றின் மதிப்பை நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், வைபி, புளுடூத், 3ஜி/4ஜி ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளதா என்று கவனித்து தேர்ந்தெடுக்கலாம். 4 ஜி வசதியை அவ்வளவாக நாம் எதிர்பார்க்க முடியாது. பொதுவாக, கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் இந்த மூன்று வசதிகளும் தரப்படுகின்றன.
8.ஜி.பி.எஸ். (GPS): வயர்லெஸ் இணைப்பு கிடைப்பதனால், நாம் எந்த இடத்திலும் இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். எனவே, இடத்தைச் சுட்டிக் காட்டும் ஜி.பி.எஸ். வசதி, ஒரு பட்டயக் கம்ப்யூட்டரின் சிறந்த அம்சமாகக் கருதப்படுகிறது. பொதுவாக அனைத்து பட்டயக் கம்ப்யூட்டர்களிலும் இது கிடைக்கிறது. இருப்பினும் ஓரிரு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் இந்த வசதி தரப்படவில்லை. எனவே ஒன்றை வாங்குகையில், இந்த வசதி உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
9. ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OSOperating System): அனைத்திலும் முக்கிய ஒரு விஷயம் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். இதன் இயக்க அடிப்படையில் தான், நமக்கு வசதிகள் திறனுடன் கிடைக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் வழக்கம்போல, தன்னுடைய ஐ.ஓ.எஸ். 4.2.1 ஐ தன் ஐ-பேடில் தந்துள்ளது. மற்ற பட்டயக் கம்ப்யூட்டர்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பல நிறுவனங்கள் தருகின்றன. பல பதிப்புகளில் (Honeycomb, Froyo, Gingerbread) இவை கிடைக்கின்றன. Eee Slate EP 121 கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 எச்.பி. என்னும் ஓ.எஸ். தரப்படுகிறது. எச்.பி. நிறுவனக் கம்ப்யூட்டரில் வெப் ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின ஐ- பேட் தவிர, மற்ற அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பிளாஷ் இயக்கம் சப்போர்ட் செய்யப் படுகிறது. இந்த வகை கம்ப்யூட்டர்களில் செயல்படுத்த, சின்னச் சின்ன அப்ளிகேஷன்கள் நிறைய தேவைப்படும். இவற்றைத் தர அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கும் நிறுவனங்கள், இணையத்தில் தங்கள் அப்ளிகேஷன் ஸ்டோர்களை இயக்குகின்றன. iTunes, Android Market, App World, webOS AppStore ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
10. எடை: இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் எந்த இடத்திற்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த என வடிவமைக்கப்படுவதால், இதன் எடையில், அனைத்து நிறுவனங்களும் கவனம் செலுத்தி உள்ளன. சராசரியாக ஒரு பட்டயக் கம்ப்யூட்டரின் எடை 700 கிராம் என்ற அளவில் அமைக்கப்படுகிறது. பிளாக் பெரி மற்றும் டெல் நிறுவனக் கம்ப்யூட்டர்கள் 400 முதல் 450 கிராம் எடையிலும் இவற்றை அமைத்துள்ளன. Eee Slate EP 121 கம்ப்யூட்டரின் எடை 1,160 கிராம் உள்ளது.
இவை அனைத்தும், ஒன்றிரண்டினைத் தவிர, இந்தியாவில் அதிகார பூர்வமாக இன்னும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. பல நிறுவனங்களின், குறிப்பாக பல சீன நாட்டுத் தயாரிப்புகள், பட்டயக் கம்ப்யூட்டர்கள் கிரே மார்க்கட் மற்றும் இணைய வெளி விற்பனை மையங்கள் வழி கிடைக்கின்றன. மெதுவாக உயர்ந்து வரும் இந்த பட்டயக் கம்ப்யூட்டர் பயன்பாடு, நிச்சயம் விரைவில் சூடு பிடிக்கும். அப்போது மேலே கூறப்பட்டுள்ள முக்கிய அடிப்படை விஷயங்களின் திறன் மற்றும் வேகம் உயரும். இவற்றை மனதில் கொண்டு நாம் நமக்கென ஒன்றை வாங்கலாம்.

தண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்

தண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்
நீங்கள் தண்டர்பேர்ட் தொகுப்பினை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாகப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படியானால், இமெயில் செய்திப் பிரிவின் டெக்ஸ்ட்டின் எழுத்தளவை கண்ட்ரோல் கீ அழுத்தியபடி + அல்லது – அழுத்தி, பெரியதாகவும், சிறியதாகவும் மாற்றுகிறீர்கள். இதில் மேலும் சில வசதிகளுக்கு View மெனுவில் Zoom மனுவில் பிரிவுகள் உள்ளன.
இதனைக் காட்டிலும் மவுஸ் வீலை நகர்த்தி எழுத்தின் அளவை மாற்றுவதையே பலரும் விரும்புகின்றனர். ஷார்ட் கட் கீகள் மூலம் ஏற்படுத்துவதனை பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு, தண்டர்பேர்ட் மவுஸ் வீல் மூலம் ஸூம் செய்திடும் வசதி இருப்பது தெரிவதில்லை. ஏனென்றால், இதற்கு சில செட்டிங்ஸ் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நாம் விரும்பும் பலவகை வசதிகளை ஏற்படுத்தலாம். அவற்றை இங்கு காணலாம்.
முதலில் தண்டர்பேர்ட் தொகுப்பின் பொதுவான ஆப்ஷன் மெனு பெற Tools > Options செல்ல வேண்டும். அடுத்தபடியாக Advanced பிரிவில் General டேப் கிளிக் செய்திட வேண்டும். இதன் மூலம் தண்டர்பேர்ட் தொகுப்பின் Config எடிட்டர் பிரிவிற்குச் செல்லலாம். இப்போது about:config விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்கள் இருப்பதால், பில்டர் விண்டோவில் நமக்குத் தேவையான கட்டளை சொற்களைக் கொடுத்து கேட்கலாம். இங்கு mousewheel.withcontrolkey.action எனக் கொடுக்கவும். பட்டியல் விண்டோவில் ஒன்று மட்டும் இருப்பது நல்லது. ஏற்கனவேமாறா நிலையில் டாகுமெண்ட்டில் உள்ள வரிகளில் எத்தனை வரிகள் என்பதனைக் கொண்டிருக்கும். இங்கு இருக்கக் கூடிய மதிப்புகள்: 0 – எத்தனை வரிகள் ஸ்குரோல் செய்திட வேண்டும் என்பதனை செட் செய்திட. 1- பக்கங்களில் சென்றிட, 2- முன்னும் பின்னுமாகச் சென்றிட, 3- டெக்ஸ்ட்டை சிறிது பெரிதாக மாற்ற, 4- பிக்ஸெல்களைக் கூட்டிக் குறைத்துப் பார்க்க.
இந்த மதிப்புகளில் விளக்கத்துடனும் வரிகள் காட்டப்பட்டிருக்கும். இந்த வரியில் டபுள் கிளிக் செய்தால், மதிப்பினை திருத்தும் வசதி கிடைக்கும். 0 முதல் 3 வரையில் தரப்படும் மதிப்பிற்கேற்ப, கண்ட்ரோல் கீயுடன் மவுஸ் வீல் சுழல்கையில் செயல்பாடு இருக்கும்.
கண்ட்ரோல் கீயுடன் செயல்பாட்டுக்கான மாற்றம் இருப்பது போல, மற்ற கீகளுடனும் செயல்பாடுகளை இங்கு செட் செய்திடலாம். அந்த வரிகள் கீழே உள்ளது போல கிடைக்கும்.
·mousewheel.withnokey.action
·mousewheel.withshiftkey.action
·mousewheel.withmetakey.action
·mousewheel.withaltkey.action
·mousewheel.withcontrolkey.action
இவை அனைத்தும் ஒரே முயற்சியில் பெற பில்டரில் mousewheel.with என அமைக்க வேண்டும். பின்னர் நம் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி அமைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஷிப்ட் கீ அழுத்தி மாற்றங்களை ஏற்படுத்த, mousewheel.withshiftkey.action என்ற பாராமீட்டரில் மதிப்பை 3 எனத் தர வேண்டும்.

விண்டோஸ் 7 டிப்ஸ் – ட்ரிக்ஸ்

விண்டோஸ் 7 டிப்ஸ் – ட்ரிக்ஸ்
விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது.
டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.
2.விண்டோக்களைக் கையாளுதல்: விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது. செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும். பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.
3. பல மானிட்டர் செயல்பாடு: ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.
4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக: விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும். இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.
5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு: நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும். மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.
6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி: என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது. இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.
7.டாஸ்க் பாரில் போல்டர்கள்: வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது.
அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம். அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.

இணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

இணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள்.
Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க
Ctrl + U – அடிக்கோடிட
Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் மட்டும் பிளாக் கொட்டேஷன் அமைக்க
Ctrl + Z – இறுதியாக அமைத்ததை நீக்க
Ctrl + Y – இறுதியாக நீக்கியதைப் பெற
Ctrl + Shift + A – ஹைப்பர் லிங்க் இடைச் செருக
Ctrl + Shift + P– போஸ்ட் முன் தோற்றம் பார்க்க
Ctrl + D – ட்ராப்ட் ஆக சேவ் செய்திட
Ctrl + P– போஸ்ட் பப்ளிஷ் செய்திட
Ctrl + S – ஆட்டோ சேவ் செய்திட
பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்:
Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க
Alt+2 – உங்களுடைய புரபைல் கிடைக்க
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்
Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்)
Alt+5 – அறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட்
Alt+7 – பிரைவசி செட் செய்வது
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம்
Alt+0 – உதவி மையம்
யு-ட்யூப் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Spacebar – வீடியோ ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த
Left Arrow – ரீவைண்ட் செய்திட
Right Arrow – இயக்கிய முன் பக்கம் செல்ல
Up Arrow – ஒலி அளவை அதிகரிக்க
Down Arrow – ஒலி அளவைக் குறைக்க
F key – முழுத் திரையில் காண
Esc key – முழுத்திரையிலிருந்து விலக

வேர்டில் டேபிள் பார்டர் அமைக்க

வேர்டில் டேபிள் பார்டர் அமைக்க
அழகாய் அமைத்த டேபிளுக்கு நாமே ஒரு பார்டர் அமைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? ஏற்கனவே இருக்கிற பார்டரை மாற்றி அமைக்கலாம் என்று ஆசைப்படுகிறீர்களா? கீழ்க்கண்டவாறு செயல்படலாமே!
1. View மெனு சென்று Toolbars என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். 2.இதில் கிடைக்கும் சிறிய நீண்ட கட்டத்தில் Line Style என்று இருக்கும் பீல்டில் உங்களுக்குப் பிடித்த கோட்டினைத் தேர்ந்தெடுக்கவும். 3.கோடு வண்ணத்தில் வேண்டும் என்றால் பார்டர் கலர் பட்டன் அழுத்தி வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள். இனி டிரா டேபிள் பட்டனை அழுத்துங்கள். அங்கே இருக்கும் பென்சில் படத்தின் மீதாகக் கிளிக் செய்தால் கர்சர் பென்சிலாக மாறும். எளிதாக இப்போது கட்டங்களை, வரிசை வரிசையாக உருவாக்கலாம். வண்ணம் பார்டர் லைன் மாற்ற வேண்டுமென்றால் மேலே சொன்ன 2 மற்றும் 3 செயல்பாடுகளை மேற்கொள்ளவும். அவ்வளவுதான் நீங்கள் எண்ணிய படியான வண்ணக் கோடுகளில் டேபிள் ரெடி. கொஞ்சம் பொறுங்கள். இந்த கோட்டை இங்கு எடுத்து விடலாமே; இங்கு நன்றாக இல்லையே என மனதிற்குள் சின்ன ஆசை பளிச்சிடுகிறதா? கவலையே வேண்டாம். மீண்டும் Tables and Borders மெனு சென்று லைனைத் தேர்ந்தெடுத்த கட்டத்தைக் கவனியுங்கள். அதில் எரேசர் என்னும் அழி ரப்பர் படம் இருக்கும். இதனைக் கிளிக் செய்து பின் அதனை நீக்க விரும்பும் கோடு மேல் மெதுவாக நகர்த்துங்கள். கோடு மறைந்துவிடும். திருத்தங்களுடன் டேபிள் ரெடியா! இனி நீங்கள் அமைத்திட விரும்பும் டெக்ஸ்ட்டை இதில் அமைக்கலாம்.

பெரிய பைலைப் பிரித்துப் பின் இணைக்க

பெரிய பைலைப் பிரித்துப் பின் இணைக்க
பைல் ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள். ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை. அந்த வேளையில், பைலைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம். அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின்,மீண்டும் அதனை ஒரு பைலாக இணைக்கலாம். இதற்கு உதவிடும் புரோகிராமின் பெயர் HJSplit. இந்த புரோகிராம் இணையத்தில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது.
இந்த புரோகிராம் பைலின் அளவு 100 ஜிபி க்கும் மேலாக இருந்தால் கூட அதனைப் பிரித்துப் பின் இணைக்கிறது. இதனை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. இணையத்தில் கிடைக்கும் இதன் ஸிப் பைலை டவுண்லோட் செய்து, HJSplit.exe என்ற இந்த பைலை, கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவில் பதிந்திடவும்.
இந்த எக்ஸிகியூடிவ் பைலின் மீது டபுள் கிளிக் செய்து இயக்குங்கள். இப்போது கிடைக்கும் Split பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் Input File என்ற பட்டனில் கிளிக் செய்திட வும். பின்னர், நாம் பிரிக்க விரும்பும் பைலைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், Output என்ற பட்டனில் அழுத்தவும்.
அதன் பின்னர், எந்த ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப்படும் பைல்கள் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். பின்னர், இவை எந்த அளவில் பிரிக்கப்பட வேண்டும் அல்லது எத்தனை பைல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து Start பட்டனை அழுத்தவும்.
உடன் பைல் பிரிக்கும் வேலை மேற்கொள்ளப் படும். பைல் பிரிக்கப் படுவதனை, ஒரு பார் சட்டம் கீழாகக் காட்டும். நீங்கள் பிரிக்கும் பைலின் அளவைப் பொறுத்து இந்த பணி மேற்கொள்ளப்படும் காலம் அமையும். முடிவில், ஒரு சிறிய அறிவிப்பு தரப்படும். இதனை அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப் பட்ட பைல் துண்டுகள் இருப்பதனைக் காணலாம். இந்த பைல்களுக்கான பெயரில் 001, 002 என இவை துணைப் பெயர்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.
பிரித்த பைல்களை இணைத்தல்: பிரித்த பைல்களை இணைப்பதுவும் எளிது. அவற்றை நீங்கள் கொண்டு செல்ல விரும்பும் கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லவும். மீண்டும் இதே HJSplit.exe பைலை இயக்கவும். File Join டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இப்போது Input File என்ற பட்டனில் அழுத்தவும். டயலாக் பாக்ஸில் 001 என்ற துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமே காட்டப்படும். அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான மற்ற பைல்கள் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே பிரிக்கப்பட்ட பைல்கள் அனைத்தும் ஒரே போல்டரில் இருக்கு மாறு வைத்திடவும். அடுத்து Output பட்டனை அழுத்தி இணைக்கப்படும் பெரிய பைல் எங்கு பதியப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிடவும். இவற்றை எல்லாம் முடித்த பின்னர், Start பட்டனை அழுத்தவும். இப்போது இணைக்கும் வேலை தொடங்கும். மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் பார் ஒன்று கீழாகக் காட்டப்பட்டு எந்த அளவில் பிரிக்கப்பட்ட பைல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும். பைல் துண்டுகள் இணைக்கப்பட்டவுடன், வேலை முடிந்துவிட்டதற்கான அறிவிப்பு செய்தி காட்டப்படும்.
இதற்கான HJSplit என்ற அப்ளிகேஷன் பைலைப் பெற http://www.hjsplit.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்

புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்
நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்றவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா? எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால், நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். முதலில் Format மெனு செல்லவும். அதன் பின் Bullets and Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திறக்கப்பட்டவுடன் அதில் காட்டப்படும் பலவகை எண் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த எண்களுக்கான ஸ்டைலை மாற்ற கஸ்டமைஸ் விண்டோவினைத் திறக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு நம்பர் விண்டோவினைத் திறக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் Customize பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இந்த விண்டோவில் உங்கள் விருப்பத்திற்கான அனைத்து செட்டிங் வசதிகளையும் காணலாம். மேலே இருக்கும் Number format என்ற பிரிவின் மூலம் உங்கள் பாண்ட், நம்பர் ஸ்டைல், எங்கு இந்த எண்கள் அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். Number position என்ற பிரிவில் எப்படி எண்கள் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அலைன் (இடது, வலது அல்லது நடுப்புறமாக) செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். Text position பிரிவு நம்பர் பட்டியலுடன் டெக்ஸ்ட் எங்கு அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். டேப் ஸ்பேஸ் எவ்வளவு தூரத்தில் எண்கள் அடுத்து டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனை அமைக்கிறது. அனைத்தும் உங்கள் விருப்பப்படி செட் செய்த பிறகு OK கிளிக் செய்து பின் மீண்டும் Bullets and Numbering விண்டோவிற்குச் செல்லுங்கள். இங்கு நீங்கள் செட் செய்த அமைப்பு நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு விண்டோவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மீண்டும் ஓகே கிளிக் செய்து உங்கள் டாகுமெண்ட்டிற்குத் திரும்புங்கள். இனி நீங்கள் விரும்பிய படி ஆட்டோமேடிக் எண்கள் அமையும்.

எக்ஸெல் டிப்ஸ்-செல்லில் குறுக்குக் கோடுகள்

எக்ஸெல் டிப்ஸ்-செல்லில் குறுக்குக் கோடுகள்
செல்லில் குறுக்குக் கோடுகள்
ஒர்க்ஷீட் ஒன்றின் செல்களில் வழக்கமாக, வேறுபடுத்திக் காட்ட பார்டர்களில் கோடுகள் அமைப்போம். அவற்றை வண்ணங்களில் அமைப்பது குறித்து இந்த பகுதியில் டிப்ஸ் ஏற்கனவே தரப்பட்டது. இங்கு எவ்வாறு குறுக்குக் கோடுகளை அமைப்பது எனக் காணலாம்.
எக்ஸெல் தொகுப்பைப் பொறுத்தவரை, தன் செல்களில் எந்த இடத்திலும் கோடுகளை அமைக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இடது, வலது, மேல் மற்றும் கீழாக அமைக் கலாம். இவற்றுடன் குறுக்காகவும் அமைக்கலாம். அதாவது மேல் இடது புறம் இருந்து கீழாக வலதுபுறம் வரை கோட்டினை உருவாக்கலாம். அதே போல வலது மேல் புறம் இருந்து, இடது கீழ் புறம் வரை அமைக்கலாம்.
முதலில் எந்த ஒரு செல் அல்லது செல்களில் குறுக்குக் கோடுகளை அமைக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Format மெனுவில் இருந்து Cells என்பதைக் கிளிக்செய்து தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இந்த இடத்தில் Format Cells டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில் Border என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அடுத்து பார்டர் என்ற பிரிவில், இடது மற்றும் வலது முனை கீழாக, குறுக்குக் கோடுடன் சிறிய படங்கள் இருக்கும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தால், தேர்ந்தெடுத் ததற்கு ஏற்றபடி கோடுகள் அமைக்கப்படும்.
பின்னர் ஓகே கிளிச் செய்து வெளியேறவும்.
இதன் சுவராஸ்யமான விஷயம் என்ன வென்றால், நீங்கள் அடுத்து செல்களில் உள்ள தகவல்களை அழித்தாலும், இந்த கோடுகள் அப்படியே இருக்கும்.
இந்த குறுக்குக் கோடுகளை செல்களுக்கு அமைக்கலாம். செவ்வக ஏரியாவைத் தேர்ந்தெடுத்து அமைக்க முடியாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் A5:C12 என்ற செல்களைத் தேர்ந் தெடுத்து, குறுக்குக் கோடுகளை அமைக்க முடியாது. குறுக்குக் கோடுகள் A5 செல்லின் மேல் இடது புறம் இருந்து C12 செல்லின் வலது கீழ் புறத்திற்குச் செல்லாது.
அனைத்து ஒர்க்ஷீட்களையும் மூட
ஒன்றுக்கு மேற்பட்ட பல ஒர்க்ஷீட்களைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு கட்டத்தில் அனைத்தையும் மொத்தமாக மூடிவிட்டுச் செல்ல விரும்புகிறீர்களா? ஒவ்வொன்றாக அவற்றை மூட வேண்டாம். ஒரே கிளிக் செய்து மூடும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.
Shift கீயை அழுத்திக் கொண்டு, File மெனுவினைத் திறக்கவும். இவ்வாறு கீகளை அழுத்துகையில், பைல் மெனுவில் உள்ள Close கட்டளை, Clsoe All என்று மாறுவதனைப் பார்க்கலாம். அதனைத் தேர்ந்தெடுத்தால், திறந்திருக்கும் அனைத்து ஒர்க் புக்குகளும் மூடப்படும்.
இந்த வசதி, எக்ஸெல் தொகுப்பில் மட்டுமல்ல; அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் (ஆபீஸ் 97, 2000, 2002 மற்றும் 2003) உள்ளது.
தேதியும் நேரமும்
எக்ஸெல் தொகுப்பின் ஒர்க் ஷீட் ஒன்றில் உள்ள செல்லில் அன்றைய தேதியை இட விரும்பினால் Ctrl + ; (semicolon) என்ற கீகளை அழுத் தவும். நேரத்தை இட விரும்பினால் Ctrl + Shift + : (colon) என்ற கீகளைஅழுத்தவும்.
ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற
எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வேறு ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
அதே ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்டின் இடத்தை மாற்ற அதற்கான ஷீட் டேபில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவாறே மவுஸை விடாமல் இழுக்கவும். இழுத்து வந்து எந்த இடத்தில் ஒர்க் புக்கினை வைத்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்திடவும். அப்படி இழுக்கையில் எக்ஸெல் சிறிய முக்கோணம் ஒன்றைக் காட்டும். எந்த இடத்திற்கு ஒர்க் புக் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதைக் காட்டும்.
இன்னொரு ஒர்க்புக்கிற்கு எப்படி ஒர்க் ஷீட்டை இழுத்துச் செல்வது என்று பார்ப்போம்.
1.ஒர்க் ஷீட்டிற்கான ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் மெனுவில் Move அல்லது Copy என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இதில் To Book என்ற டிராப் டவுண் லிஸ்ட் கிடைக்கும். இதில் புதிய ஒர்க் புக்கும் உருவாக்கலாம்.
4. புதிய ஒர்க் புக்கில் உள்ள ஷீட்களில் எந்த ஷீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் இதனை விட்டுவிடலாம். அல்லது Move தேர்ந்தெடுத்து முடிக்கலாம்.
5. செய்வதற்குப் பதிலாக காப்பி செய்திடத் திட்டமிட்டால் Create a Copy என்பதில் கிளிக் செய்து செயல்படவும்.
6. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

சோஷியல் நெட்வொர்க்கில் தளங்கள்

சோஷியல் நெட்வொர்க்கில் தளங்கள்
இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற்றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரிவது, நெட்வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக்கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites). இந்த தளங்களில் உறுப்பினர் களாகி, மற்ற உறுப்பினர் நண்பர் களுடன் அஞ்சல் பரிமாற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் பரிமாற்றம் என உறவுகள் வலுக்கும் பல வசதிகள் இந்த தளங்களில் கிடைக்கின்றன.
இணையத்தில் வலம் வருபவர்களில் 95% பேர் நிச்சயம் இந்த தளங்கள் மூலம் நண்பர்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இணையத்தில் உள்ள சமுதாய இணைய தளங்கள் குறித்துச் சுருக்கமாக இங்கு காணலாம்.
1. ட்விட்டர் (Twitter): 2006 ஆம் ஆண்டில் ஜாக் டார்சி (Jack Dorsey)என்பவரால் தொடங்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்.க்குப் பதிலாக இணையம் தரும் மாற்றாக இயங்குகிறது. நிறுவனங்களோ, தனி நபர்களோ, தங்களுக்குள் சிறிய அளவில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம். இதில் அக்கவுண்ட் தொடங்குவது எளிது. முதலில் ஆங்கிலத்தில் தொடங்கினாலும், பின்னர் பிற மொழிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
2. யு-ட்யூப் (You Tube): வீடியோ பைல்களை இணையம் மூலமாகப் பகிர்ந்து கொள்ள, கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் இணைய தளம். “நீங்களாகவே உங்களை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள்’ என்ற இலக்குடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வுலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என, டைம் இதழ் நவம்பர் 2006ல், இந்த தளத்தினை அறிவித்தது. மிக எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். பல அறிவு சார்ந்த தேடல்களுக்கு நல்ல தீனி வழங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இருப்பினும் சில மோசமான அநாகரிகத் தகவல்களும் இடம் பெற வழி தருகிறது. இதன் சமுதாயத் தணிக்கை சரியானால், நன்றாக இருக்கும்.
3. பேஸ்புக் (Facebook): ஹார்ட்வேர் பல்கலைக் கழக முன்னாள் மாணவரான மார்க் ஸக்கர் பர்க் (Mark Zuckerberg) என்பவரால் தொடங்கப்பட்டது. மிக அதிகப்படியான எண்ணிக்கையில் வசதிகளைக் கொண்ட சமுதாய இணக்க இணைய தளமாக இது இயங்குகிறது. வெற்றிகரமான ஓர் தளமாக உலகெங்கும் புகழ் பெற்று இது இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவர் களைத் தேடி அறிந்து அளவளாவவும், ஒரே மாதிரியான சிந்தனை உள்ளவர்களை அறிந்து நண்பர்களாக்கிக் கொள்வதிலும் இந்த தளம் உதவுகிறது. கணக்கற்ற அளவில் போட்டோக்களை அப்லோட் செய்திட உதவுகிறது. மொபைல் போன் வழி தொடர்பும் எளிதாக உள்ளது.
4. ஹி 5 (Hi 5): இந்திய மண்ணிலிருந்து உதயமான சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். 2003ல் ராமு எலமாஞ்சி என்பவரால் தொடங்கப்பட்டது. 2008ல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 20 தளங்களில் ஒன்றாக இடம் பெற்றது. ஒருவருக்கொருவர் நட்பு தேடி, அழைப்புகளை அனுப்பி, அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் தொடரும் உறவுகளால் இந்த தளம் இயங்குகிறது. இதில் நாம் விரும்பும் பாடல்களைக் கேட்க, இந்த தளம் தனக்கென ஒரு மீடியா பிளேயரைக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.
5. ஆர்குட் (Orkut): கூகுள் நிறுவனத்தால், 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் ஊழியர் ஆர்குட் என்பவரால் இது வடிவமைக்கப் பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. எனவே அவர் பெயரையே இந்த தளமும் கொண்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும் இது பிரபலமானது. பின்னர் உலகின் அனைத்து நாடுகளிலும் உறுப்பினர்களைக் கொண்டது.
வேவ், பஸ் (Wave, Buzz) போன்ற தளங்கள் தொடங்கப்பட்டு சில காலம் கழித்து நிறுத்தப்பட்டன. இவற்றைப் போலவே, பல சோஷியல் தளங்கள் உருவாகி, அவ்வளவாக ஆதரவு இல்லாமல் அப்படியே முடங்கிப் போய்விட்டன. இன்னும் பல தளங்கள் தோன்றலாம். சில பிரபலமாகலாம். சமூக உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறப்பான இடம் பெறலாம்.
இந்த தளங்கள் அனைத்தும் புதிய சமுதாய கூடல்களுக்கு இடம் தருகின்றன என்பது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். இருப்பினும் இந்த தளங்களில் நம் இடத்தைச் சற்று பாதுகாப்புடனே தான் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகையில், உங்கள் விருப்பங்களையும், விரும்பாதவற்றையும் அழுத்தமாகவே குறிப்பிடவும். நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதைச் சந்தேகத்திடமின்றி விளக்க மாகத் தந்துவிடுங்கள். போட்டோ பதிப்பதாக இருந்தால், உங்களின் இன்றைய போட்டோவினைப் பதிக்கவும். இது உங்கள் நண்பர்கள் உங்களை அடையாளம் கண்டு, தொடர்பினைப் புதுப்பிக்க உதவும். பிரைவசி செட்டிங்ஸ் எந்த நிலைகளில் அமைக்கலாம் (‘All’, ‘Friends and Networking’,’Friends of Friends’, ‘just friends’, மற்றும் ‘personalised’) என்பதனை உணர்ந்து அமைக்கவும். எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றின் விளைவுகளைப் புரிந்து கொண்டு, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கவும்.
நீங்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் எந்த சொல் அல்லது சொல் தொடரையும் இந்த தளங்களில் எங்கும் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். உங்களை மற்றவர்கள் காண்பதைச் சற்று வரையறைகளுடன் அமைக்கவும்.
உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யார் பார்க்க வேண்டும் என்பதனைச் சரியாக செட் செய்திடவும். இந்த தளங்களைப் பயன்படுத்து கையில் அதீத கவனம் தேவை. இல்லை எனில் மற்றவர்கள் கைகளில் பட்டு, சிதறிவிடுவீர்கள்.

நினைவில் கொள்ள சில ஷார்ட்கட் கீகள்

நினைவில் கொள்ள சில ஷார்ட்கட் கீகள்
கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.
CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.
CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.
CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.
DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.
SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.
F2 key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட
CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல
CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.
CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.
ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட
F3 key: பைல் அல்லது போல்டரைத் தேட
ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப் படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்;
ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.
CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.
ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.
ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க
F10 key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.
ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.

உங்களுக்குத் தெரியுமா! இணையமும் இந்தியாவும்

உங்களுக்குத் தெரியுமா! இணையமும் இந்தியாவும்
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரிய அளவில் நாம் இலக்குகளை எட்டவில்லை என்றாலும், இந்திய இன்டர்நெட் குறித்து நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
கூகுள் தேடல் இஞ்சின் இயக்கத்தினை நிர்வகிக்கும் அலுவலர் ஒருவர், இன்றைய இணையப் பயன்பாடு குறித்த தகவல்களை அண்மையில் கொல்கத்தா வில் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது உலக அளவில் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 30 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா 20. 7 கோடி பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் இன்னும் 4 கோடியாகத்தான் உள்ளது. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் உயர்ந்திடும் எனவும் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் இந்திய இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கை 2 கோடியாகத்தான் இருந்தது. தற்போது இது 20 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு இன்டர்நெட் பயன்படுத்து வோரில் அதிகம் பேர் பாடல்களைத் தான் தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன் முதல் .com என்ற துணைப் பெயருடன் தன் இணையதள முகவரியை இந்தியாவில் பதிந்த முதல் நிறுவனம் rediff.com ஆகும்.
இந்தியாவில் 1,80,000 சைபர் கபே மையங்களும், 75 ஆயிரம் சமுதாய சேவை மையங்களும் மக்களுக்கு இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றன.
இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் தேடப்படுவதும், ரயில்வேக்குச் சொந்தமான www.irctc.in என்ற தளம் தான்.
84% இணையப் பயனாளர்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்குச் செல்கிறார்கள்.
இங்கு மொபைல் இன்டர்நெட், பெரும் பாலும் இமெயில் செக் செய்வதற்கும், தகவல்களைத் தேடுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது.
.com மற்றும் .net துணைப் பெயர் களுடன் இந்தியாவில் 10 லட்சத்து 37 ஆயிரம் தளங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1

விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1
பிப்ரவரி 22 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7க்கான சர்வீஸ் பேக் 1 ஐ வெளியிட்டது. இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft. com/enUS/windows/downloads/servicepacks என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பிற்கான குறியீடுகள், திறன் கூட்டும் வசதிகள், நிலையாக இயங்குவதற்குத் தேவையான புரோகிராகள் மற்றும் சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறா நிலையில், நாம் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டர் தானாகவே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். தாங்களாகவே பெற்று இன்ஸ்டால் செய்திடும் வகையில் செட் செய்து வைத்துள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட தள முகவரி சென்று பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 30 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும். நீங்கள் எந்த வகையில் இதனைப் பதிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், இதற்கு 750 எம்பி முதல் 7400 எம்பி வரை உங்கள் ஹார்ட் ட்ரைவில் இடம் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு இந்த பணியை மேற்கொள்ளவும்.
இந்த சர்வீஸ் பேக் வெளியிடுவதற்கு முன் வந்த தொகுப்பினை (prerelease version of SP1) இன்ஸ்டால் செய்திருந்தால், அதனை முழுமையாக அன்இன்ஸ்டால் செய்த பின்னர் இந்த பேக்கினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். சில வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகள், இந்த சர்வீஸ் பேக்கினைச் சரியாக இன்ஸ்டால் செய்திட அனுமதிக்காது. வைரஸ் என்று எண்ணிக் கொண்டு தடை விதிக்கும். எனவே ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்குவதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நல்லது.
இத்தொகுப்பினை இன்ஸ்டால் செய்வது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்துள்ள குறிப்புகளைப் படிக்க http://windows.microsoft.com /enUS/windows7/learnhowtoinstallwindows7servicepack1sp1 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.

விண்டோஸ் 7:32/64 பிட்

விண்டோஸ் 7:32/64 பிட்
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்வது என்று முடிவெடுக்கையில் தோன்றும் அடிப்படைக் கேள்வி இதுதான்  32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களில் எதனைப் பயன்படுத்த வேண்டும்.ஏற்கனவே மாறிய பலர், இப்படி ஒரு வேறுபாடு உள்ளதா? அப்படி யானால் என் கம்ப்யூட்டரில் என்ன போட்டுள்ளனர் என்றும் கேட்டு வருகின்றனர்.
நீங்கள் எந்த பிட் (32/64) சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினாலும், விண்டோஸ் ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். இருப்பினும் சில முக்கிய வேறுபாடுகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, புதிய ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் ஒன்றை இணைக்கையில் கிடைக்கும் அனுபவத்தில் இதனைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த “பிட்’ என்பது என்ன?
64 அல்லது 32 பிட் என்று சொல்கையில், பிட் என்பது, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் குறிக்கிறது. இந்த எண் பைனரி எண் ஆகும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் 1,2,3, என்ற டெசிமல் எண்கள் இல்லை. எனவே 32க்கும் 64க்கும் உள்ள வித்தியாசம், முதல் எண்ணை இரண்டால் பெருக்கிக் கிடைப்பது இல்லை. 64 பிட் கம்ப்யூட்டர், 32 பிட் கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் காட்டிலும் ஏறத்தாழ 400 கோடி மடங்கு அதிகமாகவே கையாளும். அவ்வளவு வேகமா? என்று கேட்க வேண்டாம். இது வேகத்தைக் குறிக்க வில்லை. இரண்டும் ஒரே வேகத்தில் தான் இயங்கும். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு, அது கையாளும் தகவல்களின் அடர்த்தியில்தான் உள்ளது. 64 பிட் கம்ப்யூட்டர், மிகப் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்களைக் கையாளும் திறன் கொண்டிருக்கும். கேம்ஸ் பயன்படுத்துகையில் தரப்படும் கிராபிக்ஸ் சிறப்பான தோற்றத்தில் அமையும். அதனால் தான், அறிவியல் பணிகளுக்கான கம்ப்யூட்டர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே 64 பிட் சிஸ்டத்தில் அமைக்கப்பட்டன.
64 பிட் சிஸ்டம் தரும் மிக முக்கிய நன்மை என்னவெனில், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரி, அதிக அளவில் அமைந்திருக்கும். 32 பிட் மாடல் கம்ப்யூட்டரின் மெமரி 4 ஜிபி வரை தான் இருக்கும். இது வந்த புதிதில் மிக அதிகமாகத் தோன்றினாலும், இப்போது பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், கேம்ஸ் ஆகியவை, 4 ஜிபி மெமரியினைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஹோம் கம்ப்யூட்டர்களில் 64 பிட் பயன்பாடும் தரப்படுகிறது. 2004 ஆம் ஆண்டிலேயே, ஏ.எம்.டி. நிறுவனம் ஏத்லான் 64, சிப்பினை வெளியிட்டது. தொடர்ந்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட 64 பிட் சிப்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன் படுத்தப்பட்டன. இப்போது ஹோம் கம்ப்யூட்டர்களிலும் இவை வந்து விட்டன.
தொடக்கத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றாலும், ஏற்கனவே பழக்கத்தில் இருந்த சாப்ட்வேர் புரோகிராம்கள், பிரிண்டர் மற்றும் சவுண்ட்கார்ட் போன்ற துணை சாதனங்கள், 64 பிட் சிப்களுடன் இணைந்து செயல்பட மறுத்தன. ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும் 64 பிட் இயக்கத்திற்கும் இணையாக இயங்கும்படி அமைக்கப் பட்டுக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழக்கத்தில் வந்துள்ளதால், இந்த மாற்றம் முழுமையாக நமக்குக் கிடைத்து வருகிறது.
நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுகையில் 64 பிட் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், புதிய ஹார்ட்வேர் எதனையேனும் இணைக்கையில், அதன் ட்ரைவர் புரோகிராம்கள், 64 பிட் இயக்கத்திற்கேற்ற வகையில் அமைக்கப் பட்டுள்ளனவா என்று கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். (ஒரு ட்ரைவர் புரோகிராம் என்பது, விண்டோஸ் சிஸ்டம் ஹார்ட்வேருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும்.) விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலும் 64 பிட் பதிப்பு இருந்தது. ஆனால் அது அவ்வளவாகப் பிரபல மாகாததால், ஹார்ட்வேர் சாதனங்களை உருவாக்கிய பல நிறுவனங்கள், 64 பிட் திறனுக்கேற்ற ட்ரைவர்களைத் தயாரித்து வழங்கவில்லை.
ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும், 64 பிட் திறனுக்கான ட்ரைவர்களைக் கொண்டுள்ளன. இதனை, அந்த ஹார்ட்வேர் சாதனத்தினைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஹோம் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, 64 பிட் சிஸ்டம் பயன்படுத்துவதில் கிடைக்கும் பெரிய அளவிலான பயன், அந்தக் கம்ப்யூட்டரில் 4ஜிபிக்கும் மேலான அளவில் மெமரி கிடைக்கும் என்பதே. இது பொதுவான பயன் பாட்டிற்கு அதிகமாகத் தோன்றினாலும், இன்றைய அளவில் வரும் பல புரோகிராம்கள், கிராபிக்ஸ் இணைந்த விளையாட்டுத் தொகுப்புகள், அதிக அளவில் மெமரியைப் பயன்படுத்து கின்றன. எனவே, 4 ஜிபிக்கு மேலாக மெமரி இருந்தால், பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்துவது எளிதாக அமையும். மேலும் விண்டோஸ் 7 சிஸ்டம் தன் இயக்கத்திற்கே அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்பதனையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டரில் மெமரி அளவு குறைவாக இருப்பின், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும். இதனை நாம் அதிக புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து இயக்குகையில் அறியலாம். நவீன முப்பரிமாண கேம்ஸ்களை இயக்குகையில், இதனை அறியலாம். இந்த கேம்ஸ்கள், மெமரியில் அதிகப் பங்கினைக் கேட்கும். எனவே மற்ற புரோகிராம்களை நாம் இயக்கவே முடியாது. 4ஜிபி அளவு இதற்கு ஈடு கொடுக்க முடியாது. எனவே, அதிக மெமரியினை அனுமதிக்கும் 64 பிட் சிஸ்டம் நமக்கு சிக்கலைத் தருவதில்லை. புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர் களுக்கு, கம்ப்யூட்டர் தரும் நிறுவனங்கள், பெரும்பாலும் 64 பிட் சிஸ்டங்களையே வழங்குகின்றன. நீங்கள்,உங்கள் பழைய கம்ப்யூட்டரில், புதிய விண்டோஸ் 7 தொகுப்பினை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், கம்ப்யூட்டரின் திறன் அறிந்து மேற்கொள்ள வேண்டும்.

வேர்ட் டிப்ஸ்-டேபிளில் எண்கள்:

வேர்ட் டிப்ஸ்-டேபிளில் எண்கள்:
டேபிளில் எண்கள்: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள எண்களுக்கான ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.
வேர்டில் – ஷார்ட் கட் கீகள்
ShiftF3: தேர்ந்தெடுத்த சொல்லை சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து என மாற்றி மாற்றி அமைத்திடும்.
F4: இறுதியாக நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டினைத் திரும்பச் செயல் படுத்தும். இது தேடுதல், டைப்பிங், பார்மட்டிங், கலரிங் என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
ShiftF4: இறுதியாகக் கொடுத்த Find கட்டளையை மீண்டும் செயல்படுத்தும்.
ShiftF5: டாகுமெண்ட்டில் இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்த் தாவிச் செல்லும். தொடர்ந்து அப்படியே மூன்று அல்லது நான்கு எடிட் செய்த இடங்களுக்குச் செல்லும்.
CtrlF6: வேர்ட் விண்டோக்களுக்கு இடையே தாவிச் செல்லும்.
AltF6: டாகுமெண்ட் மற்றும் டயலாக் பாக்ஸ்களுக்கு (பைண்ட் டயலாக் பாக்ஸ்) இடையே தாவிச் செல்லும்.
F7: ஸ்பெல் செக்கரை இயக்கும்.
ShiftF7: தெசாரஸை இயக்கும்.
F8: செலக்ஷன் பகுதியை இயக்கும். எதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களோ அதன் அளவைப் பெருக்கும். (சொல், வாக்கியம், பாரா அல்லது முழு டாகுமென்ட்)
Altclick: பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள சொல் சார்ந்த தகவல் கட்டத்தினைத் திறக்கும்.
வேர்டில் குறுக்குக் கோடுடன் ஸீரோ
நம் கோயமுத்தூர் வாசகர் ஒருவர், தன் ஆதங்க வேண்டுகோளை விடுத்திருந்தார். தான் ஒரு டெக்னிகல் பொறியாளர் எனவும், தன் டாகுமெண்ட்களில் சைபர் மற்றும் ஆங்கில எழுத்து ‘O’ வினைத் தனிமைப் படுத்தி அமைக்க, சைபரின் குறுக்காக, ஒரு குறுக்குக் கோடு ஒன்றை அமைத்து, டாகுமெண்ட் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும் எனக் கேட்டு, அதற்கான வழி என்னவென்று கேட்டிருந்தார். இதற்கு ஒவ்வொரு முறையும், இந்த எழுத்து அடையாளம் உள்ள பாண்ட் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டியுள்ளது என்றும் எழுதி இருந்தார்.
அவருக்கான வழியாக இதனை இங்கு தருகிறேன்.
இந்த அடையாளம் உள்ள பாண்ட் வகைக்குச் சென்று அமைக்க விரும்ப வில்லை என்றால், கீழ்க்காணும் வழியைப் பின்பற்றலாம்.
டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர், எந்த இடத்தில் குறுக்குக் கோடுள்ள சைபரை அமைக்க வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.
1. அடுத்து Shift+F9 கீகளை அழுத்தவும். வேர்ட் பீல்ட் ஒன்றுக்கான அடைப்புக் குறிகளை அமைக்கும்.
2. இந்த சிறப்பு அடைப்புக் குறிக்குள்ளாக eq \o (0,/) என டைப் செய்திடவும்.
3. இப்போது மீண்டும் Shift+F9 கீகளை அழுத்தவும். வேர்ட் பீல்டை எடுத்து விட்டு குறுக்குக் கோடு உள்ள சைபரை அமைத்திடும்.
டைப் செய்திட வேண்டியதை ஏதேனும் ஒரு வகையில் சேவ் செய்து வைத்துக் கொண்டால், அடிக்கடி இதனை அமைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். நேரம் மிச்சமாகும்.
பெரிய டாகுமெண்ட்டில் உலாவ
வேர்டில் அதிக பக்கங்களில் டாகுமெண்ட்களை அமைக்கையில், அதன் சில பக்கங்களுக்கு அடிக்கடி சென்று, என்ன டெக்ஸ்ட் அமைத்தோம் என்று பார்த்து பார்த்து தொடர வேண்டியதிருக்கும். அல்லது தயாரித்த டாகுமெண்ட்டில் புதிய தகவல்களை இட, பல இடங்களில் எடிட் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது நாம் கர்சரை அம்புக் குறி அழுத்திச் சென்றால், பின்னர் எந்த இடத்தில் நாம் எடிட் செய்தோம் என்று அறிவது சற்று சிரமமாக இருக்கும். இது போல டாகுமெண்ட்டில் விரும்பும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வர, வேர்ட் இரண்டு வழிகளைத் தருகிறது.
முதலாவதாக, நாம் எடிட் செய்திடும் டெக்ஸ்ட் இடத்தில் டெக்ஸ்ட் கர்சரை அப்படியே வைத்துவிட்டு, வலது ஓரத்தில் கிடைக்கும் ஸ்குரோல் பாரில் மவுஸ் முனையை வைத்து, கீழ் அல்லது மேல் நோக்கி இழுத்துச் சென்று, டாகுமெண்ட்டின் பிற இடங்களைக் காணலாம். இவ்வாறு காண்கையில், டெக்ஸ்ட் கர்சர் அதே இடத்திலேயே இருக்கும். ஆனால் நாம் டாகுமெண்ட்டில் பிற இடங்களுக்குச் செல்வதால், நம் கண்களுக்குத் தெரியாது. மற்ற இடங்களைப் பார்த்த பின்னர், மீண்டும் டெக்ஸ்ட் கர்சர் இருந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். இதற்கென்ன செய்வது? ஸ்குரோல் பாரை அங்கும் இங்கும் நகர்த்திச் சென்றால், எந்த இடம் என்று எப்படி அறிவது? இந்த தொல்லையே வேண்டாம். ஜஸ்ட், ஏதேனும் ஒரு கேரக்டர் கீயை அழுத்துங்கள். டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் திரை காட்டப்படும். இதில் ஸ்பேஸ் பாரைக் கூட அழுத்தலாம்.
இதற்கான இன்னொரு வழி ஷிப்ட் + எப்5 கீகளை அழுத்துவது. இந்த கீகளை அழுத்தும்போது, அதற்கு முன்னர் எங்கு டெக்ஸ்ட் கர்சரைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அங்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். இவ்வாறு பின் நோக்கி மூன்று இடங்களுக்குச் செல்லலாம்.
டயலாக் பாக்ஸில் உதவி
வேர்ட் போன்ற அப்ளிகேஷன் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் என்று சொல்லப்படும் தகவல் பெறும் வழிகாட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. நாம் நம் விருப்பத்தினை, சம்பந்தப்பட்ட புரோகிராமிற்கு எடுத்துக் காட்டி, அதன்படி புரோகிராம் செயல்பட இவை உதவுகின்றன. எனவே இந்த டயலாக் பாக்ஸ்களில், நாம் எதனை எல்லாம் எதிர்பார்ப்போம் என்று முன் கூட்டியே திட்டமிடப்பட்டு, ஆப்ஷன் கள் பல பிரிவுகளில் தரப்பட்டிருக்கும். சில வேளைகளில், அதிகமான எண்ணிக் கையில் இவை இருப்பதால், ஒரு சில ஆப்ஷன்கள் எதற்குத் தரப்பட்டுள்ளன, அவற்றைத் தேர்ந்தெடுத்தால், என்ன மாதிரியான செயல்பாடு நடக்கும் என நமக்குத் தெரிவதில்லை. இவற்றைத் தெரிந்து கொள்ள இந்த டயலாக் பாக்ஸ்களில் ஒரு வசதி தரப்பட்டுள்ளது.
டயலாக் பாக்ஸின் மேல் மூலைகளைப் பார்க்கவும். வலது மூலையில் நம் கண்களுக்கு உடனே தெரிவது, பாக்ஸை மூட நாம் பயன்படுத்தும், எக்ஸ் அடையாளக் குறியாகும். சில டயலாக் பாக்ஸ்களில், அதன் அருகே ஒரு கேள்விக் குறி தரப்பட்டிருக்கும். இதில் கர்சரை அழுத்தினால், சம்பந்தப்பட்ட டயலாக் பாக்ஸ் குறித்த விளக்க, சிறிய விண்டோ ஒன்று வலது புறமாகத் தனியே தோன்றும். அதில் சில பிரிவுகளும் இருக்கும். இவற்றில் கிளிக் செய்தால், அந்த டயலாக் பாக்ஸ் தரும் செட்டிங்ஸ் குறித்த விபரங்கள் கிடைக்கும். இணைய இணைப்பில் இருந்தால், மைக்ரோசாப்ட் சர்வரிலிருந்து தகவல்கள் பெறப்பட்டுக் கிடைக்கும்.

கூகுள் தரும் உடனடி தகவல்

கூகுள் தரும் உடனடி தகவல்
ஒரு நாடு குறித்த பல தகவல்கள் நமக்கு அடிக்கடி தேவையாய் இருக்கும். குறிப்பாக நாம் ஒரு நாட்டைப் பற்றிய சிறு அறிக்கை அல்லது தகவல் தொகுப்பினைத் தயாரிக்க பல வகையான தகவல்கள் தேவைப்படும். எடுத்துக் காட்டாக, அதன் ஜனத்தொகை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி, அது உலக மேப்பில் எங்குள்ளது போன்ற கேள்விகளுக்கு நமக்கு விடையாகப் பலவகை தகவல்கள் தேவைப்படுகின்றன.
இவற்றைப் பெற, நாம் ஏதேனும் சர்ச் இஞ்சின் சென்று, நாட்டின் பெயரைக் கொடுத்துப் பின்னர் கிடைக்கும் தளமுகவரிகளைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடிப் பெறுவோம்.
ஆனால், இப்போது கூகுள் சர்ச் இஞ்சின் இந்த தகவல்களை மிகவும் எளிமையாவும் வேகமாகவும் பெறும் வகையில் இயங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனியின் ஜனத்தொகை என்னவென்று அறிய என சர்ச் இஞ்சின் கட்டத்தில் population Germany என்று கொடுத்தால் போதும். ஒரு நாட்டின் தேசிய கீதம் அறிய நாட்டின் பெயருடன் anthem என்றும், தலைநகர் அறிய capital city என்றும், தேசியக் கொடி குறித்துத் தெரிந்து கொள்ள flag என்றும் கொடுத்தால் போதும். எவ்வளவு எளிது பார்த்தீர்களா !!

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு
உங்கள் குழந்தையின், ஏன் உங்களுடையதும் கூட, ஆங்கிலச் சொல்லறிவினை வளப்படுத்த உங்களுக்கு விருப்பமா? எதற்கு இந்த கேள்வி? யார் தான் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம். ஆங்கிலச் சொற்களை அதிகம் தெரிந்து கொள்ளவும், நமக்குத் தெரிந்ததைச் சோதித்து அறிந்து கொள்ளவும், அருமையான ஓர் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் முகவரி http://vocabgenii.com. இந்த தளத்தில் நுழைந்து முதலில் உங்களைப் பதிந்து கொள்ளுங்கள். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்துப் பின்னர் பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்த பின்னர், இதில் விளையாடத் தொடங்கலாம். விளையாடுவதற்கு முன்னர், உங்கள் லெவல் என்னவென இந்த தளத்திற்குக் கொடுக்க வேண்டும். பின்னர் விளையாடத் தொடங்கலாம். இதில் பல சுற்றுகள் உண்டு. ஒவ்வொரு சுற்றிலும் ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் மாற்றிக் கொடுக்கப்படும். குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளும் விளக்கமும் தரப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு, சொல்லைக் கண்டுபிடித்து, முதல் எழுத்திலிருந்து வரிசையாகக் கிளிக் செய்திட வேண்டும். சொல் முழுவதும் கிளிக் செய்துவிட்டால், சரி/தவறு எனச் சுட்டிக் காட்டப்பட்டுப் பின் அடுத்த சொல் காட்டப்படும். இப்படியே முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனச் சென்று, இறுதியில் நீங்கள் பெற்ற மதிப்பெண் காட்டப்படும்.
இதனால், நாம் ஒரு அகராதியைப் புரட்டிப் பார்த்த அனுபவத்தினைப் பெறுகிறோம். பல புதிய சொற்களை அறியும் வாய்ப்புகளையும் பெறு கிறோம். நம் ஆங்கிலச் சொல்வளம் பெருகிறது.

புதுக் கம்ப்யூட்டர் வாங்கியாச்சா!

புதுக் கம்ப்யூட்டர் வாங்கியாச்சா!
குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய கூடுதல் திறனுடன் கம்ப்யூட்டர் வாங்குவது இப்போது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. ஏனென்றால், நம் அன்றாடத் தேவைகள் பலவற்றை கம்ப்யூட்டர் தான் முடிவு செய்கின்றன. எனவே நம் தேவைகளைப் பொறுத்து, இரண்டாவதாக, மூன்றாவதாக எனக் கம்ப்யூட்டர்களை வாங்கிக் கொண்டு போகிறோம்.
இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக கம்ப்யூட்டர் வாங்கிய பின் முந்தைய கம்ப்யூட்டரை என்ன செய்கிறோம்? நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. பழையனவற்றை தூக்கிப் போடுவதே இல்லை. இது பல விஷயங்களில் தேவையற்ற ஒன்று என்றாலும், கம்ப்யூட்டர் விஷயத்தில், முந்தைய பழைய கம்ப்யூட்டரைச் சில காலமேனும் வைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கியவுடன் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. முதலில் பழைய கம்ப்யூட்டரில் பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவும். இவற்றில் எவை எல்லாம், புதிய கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தேவையாக இருக்கும் என்று அந்த பட்டியலில் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம்களை டிஸ்க் வடிவில் நீங்கள் வாங்கியிருந்தால், அந்த டிஸ்க்குகளை எடுத்து வைத்திடுங்கள். அவை இயக்கப்படும் வகையில் நல்ல நிலையில் உள்ளனவா என்று பார்க்கவும். டவுண்லோட் செய்திருந்தால், மீண்டும் அவை கிடைக்கும் தளங்களுக்கான முகவரிகளைச் சோதித்துக் குறித்து வைக்கவும். இந்த புரோகிராம்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டிருந்தால், அந்த எண்களையும் பாதுகாப்பாக எழுதி வைக்கவும்.
2. அடுத்து புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், ஒரு டயலாக் பாக்ஸ் அல்லது விஸார்ட் உங்களை வழி நடத்தும். முதலாவதாக அட்மினிஸ்ட் ரேட்டர் யூசர் அக்கவுண்ட் திறக்குமாறு கேட்டுக் கொள்ளும். ஏற்கனவே முந்தைய கம்ப்யூட்டரில் என்ன பெயர் பயன்படுத்தினீர்களோ, அதனையே பயன்படுத்தவும். கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் கொடுக்கச் சொல்லி கேட்கும். இங்கு புதிய பெயரைக் கொடுக்கவும். முந்தைய கம்ப்யூட்டருக்குக் கொடுத்த பெயரைத் தர வேண்டாம்.
3. அடுத்து உங்கள் புதிய கம்ப்யூட்டரில், அதனைத் தயாரித்தவர், அவர் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களையும், தன் நிறுவனத்தின் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பதிந்து வைத்து அனுப்பியிருப்பார். இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தேவையற்றதாக இருக்கும். எனவே இவற்றை நீக்குங்கள். இவை எல்லாம் விற்பனைக்கான சில வழிகளே. இவற்றைக் காட்டிப் பின்னர், கட்டணம் செலுத்தி சில புரோகிராம்களை வாங்கச் சொல்வார்கள். இவற்றை எப்படி நீக்கலாம்? கண்ட்ரோல் பேனல் சென்று Add or Remove Programs மூலம் நீக்கலாம். முழுமையாக நீக்கப்படுவதனை உறுதி செய்திட, இந்த புரோகிராம்களை Revo Uninstaller அல்லது Total Uninstall புரோகிராம்கள் மூலம் நீக்கலாம்.
4. தேவையற்றது நீக்கப்பட்டவுடன், இனி, உங்களுக்குத் தேவைப்படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களைப் பதியவும். இந்த புரோகிராம் களைப் பதிந்தவுடன், அந்த புரோகிராம் களைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று, அவற்றிற்கான அப்டேட் புரோகிராம்கள் தரப்பட்டிருந்தால், அவற்றையும் டவுண்லோட் செய்து இண்ஸ்டால் செய்திடவும். இது போன்ற அப்டேட் செய்யக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும், இணைய இணைப்பில் இருந்தவாறே கம்ப்யூட்டரில் அப்டேட் செய்யப்படக் கூடியவையாக இருக்கும். இந்த புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், அவை இயங்க கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க வேண்டும் என நினைவூட்டினால், சோம்பல் படாமல், மீண்டும் ஒரு முறை இயக்கவும். அப்போதுதான், அந்த புரோகிராம் முழுமையாக இயங்குகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
5.கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்பட்ட சவுண்ட் கார்ட், வீடியோ கார்ட் ஆகியவற்றிற்கு,அவற்றிற்கான ட்ரைவர்களை நிறுவத் தேவை இருக்காது. ஆனால் நீங்களாக இணைக்கும் சாதனங்களுக்கு ட்ரைவர் புரோகிராம் களை இன்ஸ்டால் செய்திட வேண்டும். பிரிண்டர், வெப் கேமரா, ஸ்கேனர் போன்றவை இந்த பட்டியலில் அடங்கும். உங்களுடைய மொபைல் போன் களுக்கான அப்ளிகேஷன் களையும், புதிய கம்ப்யூட்டரில் பதிந்திட வேண்டியதிருக்கலாம்.
6. அனைத்து புரோகிராம்களும் பதிந்து முடிக்கப்பட்டவுடன், புதிய கம்ப்யூட்டரை உங்கள் இனிய தோழனாக (தோழியாக!) மாற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும், உங்களுக்குப் பிரியமான புரோகிராம்களை ஸ்டார்ட் மெனு அல்லது டாஸ்க் பாருக்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் அதிகம் நேசிக்கும் வால் பேப்பர், ஸ்கிரீன் சேவர் காட்சிகளை செட் செய்திடுங்கள். முந்தைய கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்தி வந்தால், அதே பெயர்களில், அவற்றை இங்கும் உருவாக்கவும்.
7. இப்போது உங்கள் புதிய கம்ப்யூட்டர் முழுமையாக இயங்க அனைத்து புரோகிராம்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். சரி, அவற்றில் இயங்க டேட்டா வேண்டும் அல்லவா? இவற்றை முந்தைய கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே காப்பி செய்து கொண்டு வரலாம். அல்லது இருக்கின்ற நெட்வொர்க்கில் இரண்டு கம்ப்யூட்டரையும் இணைத்து, இணைத்த நிலையில் எளிதாக மாற்றலாம். அதற்கு முன், புரோகிராம்களுடன் தயாரான நிலையில், உங்கள் புதிய கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை ஒரு இமேஜ் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஒரு எக்ஸ்டர்னல் டிஸ்க் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான இமேஜ் பேக் அப் புரோகிரம் தரப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தலாம். அல்லது Macrium Reflect Free / EASEUS Todo Backup என்ற புரோகிராம்களில் ஒன்றைப் பயன் படுத்தலாம். இரண்டுமே இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய புரோகிராம்களே.
இப்போது உங்கள் டேட்டா பைல்களை (டாகுமெண்ட், ஒர்க்புக், போட்டோ, படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள்) மாற்றுங்கள். புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள். புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்கள் இயங்கத் தொடங்குகையில்தான், பிரச்னைகள் இன்னும் என்ன என்று தெரியவரும். அப்போது முந்தைய கம்ப்யூட்டருக்குச் சென்று அதற்கான பைல்களை மாற்றுங்கள்.
நீங்கள் எக்ஸ்பி பயன்படுத்தியவராக இருந்து, பின்னர் விண்டோஸ் 7க்கு மாறியவராக இருப்பின், சில புரோகிராம்கள், விண்டோஸ் 7 இயக்கத்தில் இயங்க முடியாதவையாக இருப்பதனைக் கவனிக்கலாம். அந்த புரோகிராம் தளங்களுக்குச் சென்று அவற்றின் தன்மை குறித்து அறியவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம் பதிப்புகள் இருப்பின், அவற்றைப் பதியவும். அல்லது விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி மோட் வகையில் அவற்றை இயக்கி டேட்டா பைல்களை மாற்றவும்.