Dec 25, 2011

தமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா? - ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

ஈழவயலின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா? என்று நான் அடிக்கடி என்னுள் கேள்வி கேட்பதுண்டு! சில சமயங்களில் நாம் உயர்ந்த இனமாகவும், சில சமயங்களில் ஏதோ சில காரணங்களால் நாம் பின் நிற்பதாகவும் தோன்றுகிறது! இதுகுறித்து உங்களுடன் கலந்துரையாடினால் தான் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்! 
முதலில் எம்மை இந்த உலகத்தில் சிறந்தவர்களாக படம்பிடித்துக் காட்டும் இரண்டு காரணிகளைச் சொல்லுகின்றேன்! முதலாவது எமது மொழி! உலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலை சிறந்த மொழி தமிழ் என்று நாம் சொல்லுகிறோம்! எழுதுகிறோம்! பேசுகிறோம்! ஆனால் இதனை அனுபவ ரீதியாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறோமோ?இல்லைத் தானே! நிச்சயமாக உலகில் தமிழ் சிறந்த மொழிதானா? அல்லது, தமிழராகப் பிறந்ததனால் இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கிறோமா? 
இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டால் என்ன சொல்வீர்கள்? “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே” ஆகவே எங்கள் மொழி எமக்குப் பெரிசுதான்! என்று கொஞ்சம் சோகம் கலந்த பதிலா சொல்லப் போகிறீர்கள்? அதற்கு அவசியமே இல்லை! அப்படி ஒரு கழிவிரக்கப் பதில் எமக்குத் தேவையுமில்லை! நிச்சயமாகவே தமிழ் உலகில் தலை சிறந்த மொழிதான்! தமிழின் இனிமையும், பழைமையும் வேறெந்த மொழியிலும் கிடையாது! 
எம்மில் பலருக்கு ஆங்கிலம் தான் சிறந்த மொழி என்ற எண்ணம் இருக்கிறது! இன்னும் சிலருக்கு எமது தமிழை வளர்க்க வேண்டுமானால் ஆங்கிலத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது! இவை இரண்டுமே தப்பு! தன் தாய் மொழி அல்லாத இன்னொரு மொழியைப் பயின்றவனுக்கே நிச்சயமாக தனது தாய்மொழியின் அருமை புரியும்! இப்பதிவைப் படிக்கும் உங்கள் அனைவருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை! சரி, தமிழ் சிறந்தது சிறந்தது என்று சும்மா சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் சரியா? உண்மையாகவே தமிழ் சிறந்ததுதானா? 
ஒரு உதாரணம் பார்ப்போமா? ஆங்கிலத்தில் Come என்ற சொல்லுக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டும்தான் உள்ளது! அது “ வா” என்பதாகும்! ஆறுவயது சிறுவனுக்கும் வா தான்! அறுபது வயது தாத்தாவுக்கும் வா தான்! ஆனால் தமிழர்களாகிய நாம் “ வயதுக்கு மரியாதை செய்யும் பண்பு” கொண்டவர்கள் என்பதால், ஒரு பெரியவரைப் பார்த்து “ வா” என்று அழைப்பதில்லை! “ வாருங்கள்” என்றே அழைப்போம்! இது ஒவ்வொரு பிரதேச வழக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் வேறுபடும்! சரி, Come இன் இறந்த காலமாகிய Came என்பதற்கு என்ன பொருள் சொல்லுங்கள் பார்க்கலாம்! வந்தான் என்று சொல்வீர்களா? வந்தாள் என்று சொல்வீர்களா? வந்தார் என்று சொல்வீர்களா? வந்தது என்று சொல்வீர்களா? ஹா ஹா ஹா பாருங்கள், ஆண்பால், பெண்பால், பலர் பால், பலவின் பால், ஒன்றன் பால் அனைத்துக்குமே ஒரே ஒரு சொல்லைத் தான் வைத்திருக்கிறார்கள்! எழுவாயைக் கொண்டு மட்டுமே நாம் Came யாரைக் குறிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்! 
உதாரணம் - She came - அவள் வந்தாள்! He came - அவன் வந்தான்! ஆகவே Came என்றால் என்னவென்று யாராவது கேட்டால் சட்டென்று உங்களால் பதில் சொல்லிவிட முடியாது! இது ஆங்கில மொழிக்கு பெருமை தரும் விஷயம் கிடையாது!ஆனால் தமிழில் ஒரே ஒரு ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு பல விஷயங்களை எம்மால் கணிக்க முடியும்! 
உதாரணம் - வந்தாள் என்ற சொல்லைப் பாருங்கள்! 
இதில் பால் வேறு பாடு தெரியும் -  வந்தவள் பெண்! 
இதில் எண் வேறுபாடு தெரியும்! வந்தவள் - ஒருத்தி
காலம் தெரியும்! இது இறந்தகாலம்! - அவள் வந்துவிட்டாள்!
என்ன ஆச்சரியமா இருக்கா?எப்படி ஒரே ஒரு சொல்லிலேயே இவ்வளவற்றையும் கண்டுபிடிக்க முடிகிறது? ஹா ஹா இதுதான் தமிழ்! இதுதான் தமிழின் சிறப்பு! இப்போது நான் சொன்னது ஏதோ புது விஷம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்!ஆறாம் வகுப்பிலேயே சொல்லித் தருகிறார்கள்! நாம் தான் கவனிப்பதில்லை! 
இந்த ஒரு உதாரணம் மட்டுமல்ல! தமிழ் உலகில் உள்ள ஏனைய மொழிகளைவிட உயர்ந்தது என்பதற்கு பல நூறு உதாரணங்கள் சொல்ல முடியும்! ஆகவே, தமிழ் சிறந்தது, தமிழ் உயர்ந்தது என்று யாருமே வெறும் வார்த்தைக்குச் சொல்ல வேண்டாம்! அல்லது காக்கைக்கும் தன்குஞ்சு என்ற ரீதியில் ஒருவித கழிவிரக்கத் தொனியில் பேச வேண்டாம்! அதற்கெல்லாம் அவசியமே இல்லை! நிச்சயமாகத் தமிழ் உயர்ந்ததுதான்! தமிழோடு ஆங்கிலத்தை ஒப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமற்றது! 
தமிழைக் கற்கின்ற பிற மொழி அறிஞர்கள் மூக்கில் விரலை வைக்கிறார்கள்! தமது மொழியைவிட தமிழ் உயர்ந்திருக்கிறது என்று அவர்களுக்கு நிச்சயமாக உள்ளுணர்வு சொல்லிவிடும்! இன்று பல மொழி அறிஞர்கள் தமிழை ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்! அவர்களால் இன்னமும் தமிழைக் கற்று முடிக்க முடியவில்லை! அவ்வளவு ஏன்? தமிழர்களாகப் பிறந்த எம்மால் கூட தமிழை முழுமையாகக் கற்றுமுடிக்க ஒருபோதுமே முடியாது! தமிழ் அவ்வளவு பரந்தது! 
சரி,இப்படியான அருமையான மொழி எமக்குத் தாய்மொழியாக வாய்த்திருப்பது எமக்கு பெருமை என்றாலும், அந்தப் பெருமையினை நாம் உணர்கிறோமா? என்பதை எமக்குள் நாமே கேட்டுக்கொள்ளலாம்! இன்னொரு விஷயம் தெரியுமா? தமிழுக்கு - ஆங்கிலம் அருகில் நெருங்கவே முடியாது! ஆனால் தமிழோடு முட்டி மோதுவதற்கு என்றே ஒரு மொழி இருக்கிறது! அந்த மொழி தமிழுக்குச் சவால் விட எத்தனிக்கிறது! முயல்கிறது! ஆனால் முடியவில்லை! அது என்ன மொழி தெரியுமா?அதுதான் பிரெஞ்சு! பிரெஞ்சைப் படிக்கப் படிக்க இனிமை! இனிமை! இனிமை! அவ்வளவு அழகான மொழி! ஆனால் தமிழை நெருங்குமா என்றால்.....? இல்லவே இல்லை! இது ஃபிரெஞ்சுக்காரர்களுக்கும் நன்கு தெரியும்! 
சரி, தமிழினம் உயர்ந்த இனமாக மதிக்கப்படுவதற்கு இரண்டு காரணிகள் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதில் ஒன்றுதான் எமது மொழி! தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி அடிக்கடி தமிழர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருப்பதும் ஒரு வகை சங்கடம் தான்! சரி, உயர்ந்ததுதான்! ஒத்துக்கொள்கிறோம்! அப்படியானால் அந்த இன்னொன்று எது? உலகம் தமிழர்களைப் பார்த்து வியக்கும் அந்த இன்னொரு காரணி எது? தமிழனின் வீரமா? - மன்னிக்கவும்! தமிழர்களின் வீரம் இன்னமும் சரியான முறையில் உலகின் முன்னால் நிரூபிக்கப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்! இதில் மாற்றுக்கருத்து இருப்பவர்கள், தாராளமாக ஒரு பதிவிலே இதனை விளக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்! 
என்னது வீரமும் இல்லையா? அப்படியானால் தமிழனைப் பார்த்து இந்த உலகமே புருவத்தை உயர்த்தும் அந்த இன்னொன்று எது? எது? எது? 
காத்திருங்கள்! அடுத்த பதிவில் பேசுவோம்! யாருக்காவது ஏதாவது ஊகம் இருந்தால் பின்னூட்டத்தில் வந்து சொல்லுங்கள்! காத்திருக்கிறேன்!
Previous Post
Next Post

2 comments:

 1. tamilanin tiramai kunam panpadu nanba

  ReplyDelete
 2. தமிழ் இலக்கண வகுப்புகளை நானும் முழுவதாக கவனித்த்தில்லை.
  ஒருவேளை இலக்கணத்தை ஆங்கில வழியில் நடத்தினால் கவனிப்போமோ?
  தமிழில் அகலம், ஆழம் மிக்கது என்பதிலும், எல்லாம்கற்றுத் தெளிந்தவர்
  என்று யாராலும் ஒப்புக்கொள்ள முடியாத அலவிற்கு விரிந்துள்ளது.
  சிந்திக்கத்தூண்டிய பதிவு.
  நன்று. நன்றி

  ReplyDelete