Jan 10, 2012

கட்டபொம்மனின் இறுதி நாட்கள்

வணக்கம் நண்பர்களே..


தமிழ் மன்னர்களுக்கு என்றும் ஒரு தனித்துவத்தன்மை உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. சங்க காலம் தொட்டு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் வரைக்கும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை வரலாறு சொல்ல மறந்ததில்லை எனலாம். அந்த மன்னர்களின் வரிசையில் வீரம் என்றதும் நினைவிற்கு வரும் மன்னன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760ல் பிறந்த இந்த வீரமகனுக்கு இன்று 252வது பிறந்த நாள்.

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த மன்னனின் இறுதிநாட்கள் பற்றியதான பதிவினை இன்று ஆரம்பிக்கின்றேன். இப்பதிவு ஒரு தொடர்பதிவு. இதன் தொடர்ச்சியான பாகங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் என்பதையும் கூறிக்கொண்டு பதிவை ஆரம்பிக்கின்றேன்.

வியாபார நோக்கத்திற்காக ஆரம்பத்தில் இந்திய உபகண்டத்தினுள் நுழைந்த ஆங்கிலேயர்கள் பின்நாளில் மண்ணாதிக்க வெறிக்கு உட்பட்டனர் காரணம் மண்ணில் இருந்த வளமும், வீரமும் அவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுதான். அந்த வகையில் இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தென்னாட்டில் உள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து முகஸ்துதி செய்து திறை செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டனர். அவர்களின் மிரட்டலுக்கும் படை பலத்திற்கும் பயந்து பலர் ஓடிச்சென்று திறை செலுத்தினர். பலர் மண்டியிட்டனர்.
சிலர்தான் “தாம் உயிர் நீக்க நேரினும் வரிசெலுத்த முடியாது” என்று கூறினர். ஆங்கிலேயரையும் எதிர்த்து நின்றனர். அவ்வாறு எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்
அவரின் அனல் தெறிக்கும் கோபத்தினை கண்ட ஆங்கிலேயர்கள் தமது நில ஆதிக்கத்திற்கு இவர் தடையாக அமைந்து விடுவார் என்பதை உணர்ந்தனர். போரின் மூலம் அவரை அடக்க எண்ணி யுத்தத்திற்கு தயாராகினர்.

மேஜர் ஜோன் பானர்மன் என்ற ஆங்கில தளபதி தனது பிரமாண்டமான கம்பனிப் படையுடன் 1799 செப்டம்பர் 04ம் திகதி பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு சிவலப்பேரி மார்க்கமாக பாஞ்சாலங்குறிச்சி நோக்கி விரைந்தார்.
இந்நேரத்தில் ஏக காலத்தில் கப்டன் ஓ ரீலி(O"Reilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(collins), டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux), ப்ளேக்(blake), ப்ரௌன்(Brown) போன்ற இதர ஆங்கிலேய அதிகாரிகளும் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி தங்களது படைகளுடன் போருக்கான வேகத்துடன் நின்றனர்.
ஜோன் பானர்மனின் படை 05.09.1799 காலையில் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும், கயத்தாற்றிலிருந்தும் வந்த இராணுவ வீரர்களும் ஆங்கிலேய படையுடன் இணைந்து கொண்டனர்.

இந்நேரத்தில் வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் மறத்தமிழர் படையும் தயாரானது. கட்டபொம்மனின் படையில் சிவத்தையா நாயக்கர், தானாபதிப் பிள்ளையின் தம்பி வீரபத்திரபிள்ளை, சம்பரதி பொன்னப்ப பிள்ளை, ஃபாதர் வெள்ளை எனப்படும் வீரன் வெள்ளையத் தேவன், தன்னலங் கருதாத ஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம் இவர்களுடன் பலர் உள்ளடங்கியிருந்தனர் .
போருக்கான ஆயத்தங்கள் இருபக்கமும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் நோட்டமிடும் நோக்கில் அதாவது கட்டபொம்மனின் யுத்த ஏற்பாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு வழிமுறையை பின்பற்றினர். அதுதான் துாது அனுப்பியது.
மேஜர் ஜோன் பானர்மன் தம்முடைய படையோடு இருந்த ராமலிங்க முதலியாரை ஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமி ஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் துாதுவராக அனுப்பி வைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச் சந்தித்துகட்டபொம்மன் உடனடியாக பானர்மன்னைச் சந்திக்கவும்” என்ற செய்தியை தெரிவித்தனர்.
அதற்கு கட்டபொம்மன் வழங்கிய பதில் இவ்வாறு இருந்தது.
எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்தரவு வந்தாலன்றி, மேஜர் பானர் மென்னைப் பார்க்க முடியாது” என்பதாகும்.


"I lost no time in ordering the polegar to surrender at discretion to the company. if i would grant a written cowl, he said he would come to me; but not without."
 அரசின் செயலாளரான அப்போது இருந்த ஜோசையா வெப்பிற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மேஜர் ஜோன் பானர்மென் 05.09.1799 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகளே அவை..

பெயரளவில் நடந்த சமரச முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. ஆங்கிலேயருக்கு அடங்கி ஒடுங்கிப் போகவும் திறை செலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராக இல்லை என்பது ஆங்கிலேயர்களுக்கு மேலும் உறுதிபடத் தெளிவானது.

அடுத்த கட்டமாக போர்தான் தீர்வு என ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். காலத்தால் அழியாத, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர் ஆரம்பமானது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தெற்குக் கோட்டை வாசலும், வடக்குக் கோட்டை வாசலும் ஆங்கிலேய படையினரால் முதலில் தாக்கப்பட்டது. இந்த முதற்கட்ட போரில் ஆங்கிலேய படையின்  நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர். இருப்பினும் போர் தீவிமாக நடைபெற்றது. ஆங்கிலேய படையின் பீரங்கிகள் செயற்பட தொடங்கின.., அவை கோட்டைச் சுவர்களைத் துளைத்து உடைத்தெறியத் தலைப்பட்டன.
இதனால் கோட்டையை இழந்து விடுவோமோ என்ற நிலையில் தீவிர ஆலோசனையை உடனடியாக மேற்கொண்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இறுதியில் திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்று விட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை நோக்கி விரைந்து சென்றார்.

மறுநாள் முழுவதும் கோட்டையில் இருந்த படைகளுடன் இடம்பெற்ற கடுமையான போரினை தொடர்ந்து 09.09.1799 காலை 09.30 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை மேஜர் பானர்மென் கைப்பற்றிக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும் திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட அவர் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பல பாளையக்காரர்களுக்கும் கடிதங்களின் ஊடாக கட்டளையிட்டார்.
அந்த கடிதம் வடிவமைக்கப்பட்ட விதம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தன்மையை மேலும் பறை சாற்றி நிற்கிறது எனலாம். 
"ஒவ்வொருவருடைய குணத்திற்கும் கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும் அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப் பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம் எழுதியதாக அவரே அரசுக்கு 11.09.1799 இல் நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
... that I found it necessary to very the style of my letters to the different polegar, according to the knowledge I had of their characters, and what I knew of their dispositions towards cataboma Naig.

கடிதங்களின் மூலமாக கட்டளைகளை பிறப்பித்த பின் ஆங்கிலேய படைகள் கட்டபொம்மனை தேடுவதற்கு தயாராகின. லெப்டினென் டக்ளஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளையும், கப்டன் ஓ ரெய்லி தலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும் இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு முக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர் பானர்மென் செல்வதும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம் சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனது படைவீரர்களுடன் கட்டபொம்மனைப் பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்கு உதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும் படியும் ஆங்கிலேயருக்கு தகவல் தந்தார். உற்சாகமடைந்த பானர்மென், குறிப்பிட்ட அளவு படைவீரர்களுடன் கப்டன் ஓ ரெய்லியையும் லெப்டினென் டக்ளஸையும் எட்டயபுரம் படையினருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.
கோட்டையை விட்டு வெளியேறிச் சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டயபுரத்தாரின் படைகள் கோலார்பட்டி கோட்டைப் பகுதியில் எதிர்கொண்டன. இச்சம்பவம் 10.09.1799 அன்று நடைபெற்றது. இரண்டு தமிழர் படைகளுக்குமிடையில் போர் இடம்பெற்றது. இதில் இரு தரப்பிலும் பெரிய சேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர் வீரப் போரிட்டனர். போரின் முடிவில் ஆறு வீரர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, அவரது தம்பி வீரபத்திரபிள்ளை, ஆதனூர் வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம் சுப்பா நாயக்கர், முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய 34 பேர்களை ஆங்கிலப் படையினர் அப்போரின் போது கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அன்று எட்டயபுரம் செய்த அந்த துரோகத்திற்கும், பாவத்திற்கு பரிகாரமாகவே ஆங்கிலேயரை எதிர்க்க பின்நாளில் பாரதியார் அதே மண்ணில் தோன்றினார் என்று பலர் இன்று கருதுகின்றனர்..!)

அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1

அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1
கூடங்குள அணுஉலைகளின் கட்டுமானத்திற்காக 13,147 கோடி ரூபாயைச் செலவு செய்தபின், இயக்கவிருக்கின்ற நேரத்தில் மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே தடுத்து நிறுத்தியிருக்கலாமே! என்ற வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.

அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது அணுஉலையே அதற்குத் தீர்வு அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது.

 வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலன் களையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!

இந்திய மின் நிலவரம்: மின்சாரம் நமக்கு இன்றியமையாத ஆற்றலாக இருந்து வருகிறது. இதே போன்று நமக்கு இன்றியமையாத ஆற்றல்களாக இருந்து வருபவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்கள். தொழில்துறை, விவசாயம், போக்குவரத்து, வணிகம், வீட்டு உபயோகம், பொதுப்பயன்பாடு என எண்ணற்ற துறைகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட இந்தப் பல்வேறு ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.

energy_efficiency_300இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில், நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் 65.09%, புனல்மின் 21.22%, சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% அணுமின் 2.62% என நிறுவுதிறன் விகிதம் உள்ளது. மொத்த நிறுவுதிறன் 1,82,344 மெகா வாட்டாக (மெ.வா.) உள்ளது.
அதிகளவில் மின்சாரம் தேவைப்படும் துறைகளாக தொழில்துறையும் விவசாயமும் இருந்து வருகின்றன. தொழில்துறையில் அதிகளவிலான ஆற்றல் தேவைப்படும் தொழில்கள் (Energy intensive industries) என அலுமினியத் தொழில், காரக் குளோரின் (Chlor – Alkali), இரும்புத் தொழில், சிமெண்ட் தொழில், உரத் தயாரிப்பு, நூற்புத் தொழில் போன்றவைகள் பல காலமாக அறியப்பட்டு வருகின்றன.

விவசாயத்துறையில், கணிசமான மின் பயன்பாடு இருக்கிறது. இந்தியாவில் 200 லட்சம் பம்ப் செட்டுகள் இயங்கிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை திறம்பட மின்சக்தியைப் பயன்படுத்துவதில்லை.

இதையடுத்து பெருமளவில் ஆற்றலை உறிஞ்சுவது, மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சக்தியைப் பயன்படுத்துவோரின் இடத்திற்கு வந்துசேர்வதற்கு இடையில், மின்கடத்தல் மற்றும் பகிர்மானத்தில் (Transmission and distribution) நடத்தப்படுகிற செலவாகும். இதை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்புகள் (Aggregate Transmission & Commercial losses) என்ற பெயரில் அழைக்கின்றனர். உலக நாடுகளில் தயாரிக்கப்படும் மின் ஆற்றலில் இது அதிகட்சமாக 15% என்று உள்ளது. நம் நாட்டில் இது சில மாநிலங்களில் 50% - ஐத் தாண்டுகிறது இந்திய சராசரியாக 2007-08 கணக்குப்படி இது 31.65%. அதாவது, நம் நாட்டில் சராசரியாக தயாரிக்கப்படும் மின்சார ஆற்றலில் 31%-க்கு மேல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப, வணிக மின் இழப்பு!

மின் பற்றாக்குறை: தற்போது நமக்கு மின்தட்டுப்பாடு இருந்து வருவது உண்மைதான். இதற்குத் தீர்வு பற்றிச் சிந்திக்கும்போது, வழக்கமாக சூரியஒளி, காற்றாலை, Biomass போன்றவற்றை மூலங்கள் எனக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து பெறக்கூடிய மின்சக்தி பற்றிக் கணக்கில் எடுத்து வருகிறோம். இவை தற்போதைய மின் தேவையை நிறைவு செய்யப் போதுமானவையா என்ற கேள்வி எழும்போது சரியான மாற்று என்ன என்பது நம்முன் பெரும் சவாலாக நிற்கிறது!
விஷ‌யம் இந்தியாவில் இப்படி இருக்க, உலகநாடுகள் அனைத்திலும் என்ன நடக்கிறது? உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படுகிற அமெரிக்கா ஜப்பான், பிரான்சு என அனைத்திலும் பாதுகாப்புக் காரணங்களால் புதிய அணுஉலைகளைத் துவக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடச் சொல்லி வருகிறார்கள்.

ஆக, இன்று இந்தியா சந்திக்கிற மாதிரியான சிக்கலைத் தானே அந்நாடுகளும் சந்திக்கும்? அவர்கள் முற்றும் துறந்தவர்களாகக் காட்டிற்கு ஏதும் சென்றுவிடவில்லையே! அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே! அந்நாடுகளில் காற்று, சூரியஒளி போன்ற மின் ஆற்றல் மூலங்கள் நம் நாட்டைக் காட்டிலும் குறைவு என்பது தானே உண்மை! அவர்கள் எப்படி ஆற்றல் தன்னிறைவை அடையமுடிகிறது? நமக்கு தெரியாத ரகசியமான ஆற்றல் திட்டங்கள் ஏதும் அவர்கள் வைத்திருக்கிறார்களா?

இப்போது நம் நாட்டிற்கும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம்.
தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்: அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சனையின் போது (Energy Crisis), பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு (Energy Conservation) முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல் விலைகளை, பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது! அந்த முறை தான் “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency)”.

 அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் (Energy Efficiency Measures), 1970களில் துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது. திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம். பழைய தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால், அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் குறைத்தது” என்கின்றனர்.

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர் மின், சூரியசக்தி, காற்றாலை என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப் பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency): இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி, ஒரே ஆற்றல் சேவைக்கு (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு ஆகும் ஆற்றலை) ஆற்றல் விரையத்தைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆற்றல் செலவைக் குறைக்க முடியும்.

ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம். தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும்போது விரையம் செய்து வந்தததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில் தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாதபோது, மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும், அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு குறையவில்லை. விரையம் செய்வதைத் தவிர்த்ததால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார் அரூபமாக உருவாக்கியதாக (Virtual Generation) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதையே திறன் உருவாக்கம் (Capacity Creation) என்று சொல்லி அழைக்கின்றனர். ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுமுறை.

அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயனிப்பவர்களுக்கு “எ” அளவு பெட்ரோல் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச் செய்து அதே நபர்கள் அதே பயணத்தூரத்தை “எ” அளவைக் காட்டிலும் குறைவான பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில் மிச்சமாகிறது.

இதேபோல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது “அ” அளவு மின்சக்தி தேவையாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே வேலையை செய்வதற்கு “அ” அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு நேரம் நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும் பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின் கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத் தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் என்று அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய மோட்டாருக்கு கொடுக்கப் பயன்படும்.

இம்முறையைச் செயல்படுத்துவதற்குக் கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1 முதல் 3 வருடங்களுக்குள் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று விடுவர். ஆக இம்முறையில் நமக்குப் பயன். இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது என்பது இரண்டு, இரண்டரை யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும். இதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல் தான் பெட்ரோல், எரிவாயு செலவு குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டில் அமெரிக்க அனுபவம்: 1980களிலேயே அமெரிக்க ஆற்றல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்தரவாத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழி” என்று அலசிப் பார்த்துக் கூறினர். அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அந்த ஆற்றல் விஞ்ஞானிகள் 1980களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச் சிந்திக்கவும்!

அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபுசாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு உள்ளது. இதிலும், பெயரில் உள்ள வரிசைக் கிரமம் மிக முக்கியமானது! ஆற்றல் சிக்கலுக்கான முதன்மையான மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் பின்னர் தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு அறியும்.

2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை:
1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!

2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!

மேற்சொன்ன அமெரிக்க சபை, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:
“இது பயனீட்டாளர் அமைப்பிலிருந்து உருவாகிற மூலமாக (Utility System Source) மதிக்கப்படுகிறது. இது புவி வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases)) குறைப்பதோடு பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின் காரணமாக சட்டமன்றங்களும், கட்டுபாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுக்கு முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை செய்கின்றனர்”.

இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.
உலகில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம் (Energy Efficiency):
CFL_330நமக்கு மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப்பை CFL பல்ப்பைக் கொண்டு மாற்றுவது பற்றித் தெரியும். மின் மோட்டர்கள்தான் மின்பளுவில் (Electrical Load) முக்கியமான பங்கு வகிப்பவை. தொழிற்சாலைகளில் 70மூ-க்கும் மேலான மின்பளு இவற்றினால்தான். விவசாயத்தில் கிட்டத்தட்ட முழுமையான மின்பளுவும் மின்மோட்டர்களால்தான்.
எப்படிப்பட்ட மின்மோட்டர்களை வாங்குவது, ஒரு பயன்பாட்டிற்கு அதன் சக்தி என்னவாக இருக்க வேண்டும், அதை எந்நேரத்தில் இயக்குவது, அதில் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்த வேறேதும் வழிகள் உண்டா? என்பவை போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள்.

 மோட்டார்களில் ஒரு சிறிய அளவு சேமிப்பு செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்து தான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலை சேமித்து வருகின்றன. நம் நாட்டில் இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில் வடிவமைக்கப்படுகன்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

 திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளில், மின் ஆற்றல் (Electrical Energy), வெம்மை ஆற்றல் (Thermal Energy), காற்றழுத்தத் தேவைகளுக்கான ஆற்றல்களின் (Air Compressor) தணிக்கை என நுண்மையாக பல ஆற்றல் தணிக்கைகளைச் (Energy Audit) செய்து திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகுக்க முடியும்!

 அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளூர் அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத் தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும் வெற்றியடைகின்றனர்! வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத் தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்!
உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?

இந்தியாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவு: இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது. அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர். அமூல்யா ரெட்டி மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல் தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத் துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும் செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.

 இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (National Productivity Council), அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம் (Center for Energy and Environmental studies of Princeton University, USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல் செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient Energy use – Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கிஷ‌த்தை வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை ஆராயும் கவுன்சில் (Technology. Information, Forecasting & Assessment council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore, India) ஆகியன.

 இந்த தொழில்நுட்ப பட்டியல் 1994 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்படுபவை மிகவும் முக்கியமானவை: “மின்சாரத்திற்கான அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு, புதிய மின்நிலையங்களை அமைப்பதைக் காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைநிலையில் (End use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சாரப் பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின் சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.”
 “இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு. இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள் (Data) இல்லை என்பது தான்”.

 அவர்கள் சொன்னவை இன்றளவும் இந்தியாவிற்குப் பொருந்தும். வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக் கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India) இதற்கான தரவுகள் இருக்காது என்பது நிச்சயம்!
 அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! இவ்வளவு அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டில் பொதுவெளிக்கு வராமல் போனது தற்செயல்தானா? இது பற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist) அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர்? தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்?
நம் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில பெருந்தொழில் நிறுவனங்கள், 1999 முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதை சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர்.

 இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது அதுதான் நமக்குத் தேவை என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?
 பிரதமருக்கு இந்த மூலம் (Energy Source) பற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? Integrated Energy Policyயைத் தீட்டும் Planning Commissionம் முறையின் முக்கியத்துவம் பற்றி பிரதமருக்கு விளக்கியதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு என்ற மூலத்தைப் பற்றி கணக்கிடக் கூட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில், அதில் அரூபமாக ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வெளிக்குக் காட்டாமல் நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல் வளர்ச்சிக்கு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞானப்பூர்வமான விவாதம்?

டெலஸ்கோப் உருவாகிய வரலாறு

டெலஸ்கோப் உருவாகிய வரலாறு
1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டார். 

ஹான்ஸ் லிப்பன்ஷி  சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்க தொடங்கினான். அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது . அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.

galileo_telescope_320ப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்தார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது. உடனே கலிலியோ (Galileo)அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ்கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.

தன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் (telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் (telescope) பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

லிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன. 
telescope_320ந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இத்தொலை நோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது. 
து வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளனர்.

ஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

வாயில் வாழும் பாக்டீரியாக்கள்

வாயில் வாழும் பாக்டீரியாக்கள்

Mouthநமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?

ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர். வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.

உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியமில்லையா?


அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

குணத்தை மாற்றும் வைரசுகள்

குணத்தை மாற்றும் வைரசுகள்
மனிதர்களின் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. இது பேக்டிரியாவின் குணத்தைப் பற்றியது. எசரிக்கியா கோலை எனும் பேக்டிரியா சாதுவானது. வழக்கமாக வெப்ப இரத்தப் பிராணிகளின் குடலில் வாழும். மனிதர்களின் குடலில் கட்டாயம் இருக்கும். இல்லாவிட்டால்தான் பிரச்சனை. 

அபூர்வமாக சில எசரிக்கியா கோலை பேக்டிரியா கொடும் நோய்க்கிருமியாக மாறிவிடுவதுண்டு. இந்த கொடிய குணத்திற்குக் காரணம் இதனிடமிருந்து வெளிப்படும் ஷிகா என்றொரு விஷம். ஷிகா விஷம் குடலில் பட்டுவிட்டால் கடுமையான இரத்த பேதி ஏற்படும், சிலருக்கு சிறுநீரகம்கூட பாதிப்படைந்துவிடும். இத்தனை மோசமான குணம் இதற்கு ஏற்படுவதற்கு இதனிடம் வேண்டிய ஜீன்கூட இல்லை.

நம்மைத் தாக்குவதுபோல பேக்டிரியாக்களைத் தாக்குவதற்கென்று வைரசுகள் சில உள்ளன. பேக்டிரிய ஃபாஜ் என்று அவற்றைக் குறிப்பிடுவார்கள். இவை ஒரு பேக்டிரியாவிலிருந்து இன்னொன்றுக்கு பரவி வளரும்போது ஷிகா விஷத்திற்கான ஜீனையும் கொடுத்துவிட்டுச் செல்கின்றன. கெமில்லா சக்ஸ் என்ற பெண் தனது பி எச்டி பட்டத்திற்காக செய்த ஆராய்ச்சி மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. நார்விஜியன் கால்நடை மருத்துவப் பள்ளியில் இந்த ஆய்வு நடந்தது.

மனிதர்களைக் காக்கும் பாக்டீரியாக்கள்

மனிதர்களைக் காக்கும் பாக்டீரியாக்கள்
மனிதனின் குடலுக்குள் எவ்வளவு பாக்டீரியா இனங்கள் வாழ்கின்றன தெரியுமா? சொன்னால் ஆச்சரியத்தில் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்! சுமார் 1,000-1,500 இனங்கள் மனிதனின் குடலில் கூட்டமாய் வாழ்கின்றனவாம். மனிதனின் உடலில் சுமார் 100,000௦௦௦,000௦௦௦,௦௦௦000,000 செல்கள் உள்ளன. ஆனால் அதைப்போல் 10௦ மடங்குக்கும் மேலாக பாக்டீரியாக்கள் வீடுகட்டி குழந்தை குட்டிகளுடன் ஜாம் ஜாம் என்று குடித்தனம் நடத்துகின்றன. இவைகளில் 60% பாக்டீரியாக்கள் உலர்ந்த மலத்தில் காணப்படுகின்றன. இவைகளில் 99% காற்று இன்றியே சுவாசிக்கின்றன.

குழந்தை கருவாக‌ தாயின் கருவறையில் இருக்கும்போது பாக்ட்டிரியா அதன் குடலில் இருக்காது. குழந்தை பிறந்த பின்பே, தாயிடமிருந்தும், சுற்றுச் சூழலிலிருந்தும் அவை குழந்தையின் குடலுக்குள் நுழைகின்றன. இங்கே வசிக்கும் பாக்டீரியக்கள் குறைந்த நீளமுள்ள கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் செல்களின் வகைகளையும், பரவுதலையும் கட்டுப்படுத்துகின்றன. வேறு சில வளர்சிதை மாற்ற செயல்பாடுகள், உருவாக்கம் போன்றவைகளுக்கும், பயோடின் (Biotin) மற்றும் போலேட் (Folate) போன்ற வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகின்றன. மேலும் மக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவைகளின் அயனிகளை உட்கிரகிக்கவும் பயன்படுகின்றன. முக்கியமாக, இவை ஒவ்வாமை ஏற்படாமல் நம்மை காக்கின்றன. தற்காப்புத் திறன் தடாலடியாக ரொம்ப மிகைப்படுத்தி செயல்படாமல் அவற்றை கட்டுக்குள் வைத்து நம்மை காப்பதுவும் இவைகளே. பாக்டீரியாக்கள் நமது மலக்குடல் மற்றும் மலப்புழை வியாதிகளை தடுக்கின்றன. வீக்கத்தை குறைக்கின்றன. ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் எதிர் உயரி மருந்துகள், இந்த பாக்டீரியாக்களை அப்படியே வழித்து எடுத்துவிட்டு நம்மை நிர்க்கதியாக்கி விடுகின்றன.

இங்கே பலப்பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. நாம் பாக்டீரியாவின் காலனி மேலதான் நடக்கிறோம் என பேராசிரியர் ஜெரோன் ராஸ் சொல்லுகிறார், இந்த மார்ச் மாத இயற்கை இதழில். மேலும் மனித உடலில் இருப்பதைப் போல 100 மடங்கு மரபணுக்களின் எண்ணிக்கை பாக்டீரியாவில் உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் சுமார் 124 ஐரோப்பியர்களின் மலத்தின் மாதிரிகளை சோதனை செய்தனர். பின் அதிலுள்ள பாக்டீரியாக்களின் ஆயிரக்கணக்கான மரபணுக்களைப் பிரித்து மேய்ந்தனர். மரபணுவின் DNAக்களிலுள்ள வரிசைகளையும் கண்டறிந்தனர். அவை மனிதனின் மலத்திலும், குடலிலும் அவை ஒரு சூழல் மண்டலத்தையே உருவாக்கி வாழ்கின்றன என்ற தகவல் சமீபத்தில்தான், மார்ச் 4 ம் நாள், "இயற்கை" பத்திரிக்கையில் வெளியானது. இதிலுள்ள சுவையான, ஆச்சரியப்படும்படியான தகவல் என்னவென்றால், உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் குடலிலும், கிட்டத்தட்ட ஒரே வகை நுண்ணுயிரிகள்தான், அதாவது பாக்டீரியாக்கள்தான் வசிக்கின்றன. இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது என அறிவியல் உலகம் கருதுகின்றது. உலகின் அனைத்து மனிதர்களின் குடல், மலத்தை பாக்டீரியாக்கள் பாலமாக இருந்து இணைக்கின்றன என்பதுதான்.

நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி

நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது. இம்மொழியைக் கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய முடிவுகளை (உ.தா. நோய் உண்டாக்குவது) எடுக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள், 'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.

 ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதற்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதற்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அவற்றை எதிர்ப்பதற்காகவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது. 
'விப்ரியோ பிசுசரி' (vibrio fischeri) என்ற ஒரு கடல் வாழ் பாக்டீரியாவில் இந்த குவாரம் சென்சிங்கை முதன்முதலில் கண்டுபிடித்தவர் 'போணி பேசுலர்' (Bonnie Bassler). இந்த பாக்டீரியாக்கள், பகலில் மணலுக்கு அடியிலும், இரவில் கடல் மேல்பரப்பிலும் வந்து இரைதேடும் ஒரு வகை மெல்லுடலிகள் வகையைச் சார்ந்த 'ஸ்குவிட்' (Squid) என்ற உயிரினத்தின் உடலுக்குள் இருந்து கொண்டு, இரவில் ஒளிரக்கூடிய திறன் கொண்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாக்டீரியாக்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்தவுடந்தான் ஒளிர்வதற்கான புரதத்தை சுரக்கின்றன. அதற்குமுன் இதை செய்வதில்லை. தங்களின் எண்ணிக்கையை குவாரம் சென்சிங்கின் மூலமாகத்தான் அறிந்துகொள்கின்றன என்று பேசுலர் கண்டறிந்தார்.

பாக்டீரியாக்களின் இந்த வேதிச்சொற்களை 'ஆட்டோ இன்டியூசர்கள்' (Autoinducer) அல்லது சுருக்கமாக AI என்று சொல்கிறார்கள். ஆனால் பாக்டீரியாக்கள் என்ற தொகுதியை (Phylum) எடுத்துக்கொண்டால், பல நூறு பேரினங்களும் (Genus) அவை ஒவ்வொன்றிலும், பல்லாயிரம் இனங்களும் (species) இருக்கிறன. உதாரணமாக, விப்ரியோ என்ற பேரினத்தில் விப்ரியோ பிச்சரி (vibrio fischeri) என்ற இனம் இருப்பது போல, காலரா நோயை உண்டாக்கும் விபிர்யோ காலரே (vibrio cholerae) என்ற இனமும் உண்டு. இதுபோல் பற்பல ஆயிரம் வகைகள் உண்டு. இவற்றிலிருந்து தத்தம் இனத்தை அடையாளம் கண்டு/கேட்டு முடிவெடுப்பது என்பது, பல வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து வாழும் இயற்கை சூழலில் கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனால், அதற்கும் ஒரு வழி கண்டறிந்துள்ளன இந்த புத்திசாலி உயிரினங்கள். பாக்டீரியா எனும் 'தொகுதி'யை தனியாகவும், விப்ரியோ (vibrio) என்ற 'பேரின'த்தை தனியாகவும், பிச்சரி (fischeri) என்ற 'இன'த்தை தனியாகவும் பிரித்து தெரிந்துகொள்ள, மூன்று வகை வேதி-வார்த்தைகளை இவை உபயோகிக்கின்றன. அதாவது, தன்னுடைய ஒரே இனத்தை தெரிந்துகொள்ள AI-1(நான்)-ஐயும், தம் பேரினத்தை தெரிந்துகொள்ள CAI-1(நாம்)-ஐயும் மற்றும் மற்ற வகை பாக்டீரியாக்களை தெரிந்துகொள்ள AI-2(நீ)-ஐயும் சுரக்கின்றன. இதன் மூலம் தத்தம் இனத்தை மட்டுமல்லாமல் தன்னை சுற்றி வேறு யார் யார் இருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்கின்றன.

மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும், இந்த தொழிற்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகின்றன. மனித உடலில் நுழைந்த உடன், சிறிய எண்ணிக்கைகளில் இருக்கும்போது, இவை எந்த தீங்கும் செய்யாமல், இனப்பெருக்கம் மட்டுமே செய்துகொண்டிருக்கும். மனித செல்லை தாக்குவதற்கு தேவையான அளவு நச்சு-புரதங்களைச் சுரக்க, போதிய அளவு தங்களின் சகாக்களின் எண்ணிக்கை பெருகிய பிறகு, எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நோய் விளைவிப்பதற்கான புரதங்களைச் சுரந்து (மனிதனுக்கு) நோய் விளைவிக்கின்றன. இந்த ஒரு செல் உயிர்களிடம் இந்த அளவுக்கு ஒழுங்குகள் இருப்பது ஒரு புறம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு செல்லை மட்டும் கொண்ட இந்த உயிரிகளே இத்தனை அறிவுடன் செயல்படும்போது, பல கோடி செல்களைக்கொண்ட மனிதர்களை சொல்லவா வேண்டும்?

பாக்டீரியாக்கள் பேசும் அதே வார்த்தைகளைப்போல அமைப்பைக்கொண்ட வேறு வேதிப்பொருள்களை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து, இந்த பாக்டீரியா இருக்கும் இடத்தில் சேர்த்து சோதித்துப் பார்த்தனர். இதனால், குழப்பமடைந்த பாக்டீரியாக்கள் தங்கள் சகாக்கள் எல்லாம் இல்லை என்று நினைத்து நோய் உண்டாக்காமலே இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் மருந்து எதிர்ப்புசக்திகொண்ட நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதால் (தொடர்புடைய பதிவு), இந்த தொழிற்நுட்பம் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோயிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படும் என்று நம்பப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கிற அறிஞர்களுக்கும், இன்னும் அறிவியலின் உச்சங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் மாணவர்கள் என்று அனைவருக்கும் நம் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வோம்!

பி.கு.: அட இது பரவாயில்லை, பாக்டீரியாக்கள் எழுந்து நின்று நடந்து செல்வதைக்கூட நம்ப படமா எடுத்து வெச்சுருக்கோம் தெரியுமா (இணைப்பு)??

கல்வி குற்றத்தில் சிறந்த தமிழ்நாடு!

கல்வி குற்றத்தில் சிறந்த தமிழ்நாடு!

சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு எனப் பல குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

அடுத்த வரியைப் படித்து அதிர்ச்சி அடைய வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் பல குற்றங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு என்று பல வகையான குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம் நாம். தேசியக் குற்றப் பதிவுத்துறை (‡National Crime Records Bureau - NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தத் தகவல்களைத்  தெரிவிக்கின்றன.

சாலை, ரயில் விபத்துகள்

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். 15 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த இடம் ஆந்திராவிற்கு (15,337 பேர்), அடுத்து உத்தரப்பிரதேசத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும்.

நாடு முழுக்க கடந்த 2010ம் ஆண்டு 1.61 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, நாட்டில் ஒவ்வொரு நாளும் சாலையில், ரயில் பாதையில் 18 பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (1.61 லட்சம் விபத்துகளில் 1.34 லட்சம் விபத்துகள் சாலை விபத்துகள்). இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்குக் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்துள்ளன.

இதற்குப் பெருகி வரும் வாகனங்கள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் இருந்ததைவிட 28 சதவீதம் வாகனப் பதிவு அதிகரித்துள்ளது. 20 சதவீதச் சாலை விபத்துகள் இரு சக்கர வாகனங்களாலும் 28 ஆயிரத்து 800 விபத்துகள் கனரக வாகனங்கள், டிரக்குகளாலும் நடந்துள்ளன.

தற்கொலைகள்
வேலையின்மை, வறுமை, கடன் தொல்லை, வரதட்சணைக்கொடுமை போன்றவற்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 21 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2010ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 16,561 பேர். நாட்டில் நடந்த தற்கொலைகளில் 57.2 சதவீதம் தமிழகம், மேற்கு வங்காளம் (16,037), மகாராஷ்டிரா (15,916), ஆந்திரா (15,901), கர்நாடகா (12,651) ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்துள்ளன. இதில் திகைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்துகொள்பவர்களில் 65.8 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்!

முதியோர் பாதுகாப்பு


தமிழகத்தில் முதியோர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? இல்லை என்றுதான் உதட்டைப் பிதுக்கத் தோன்றுகிறது. ஆனால், இதில் ஒரு சின்ன ஆறுதல். ஆந்திராவையும் உத்தரப்பிரதேசத்தையும் அடுத்து, முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மூன்றாவது மாநிலமாகத்தான் இருக்கிறது தமிழகம்.

ஆனால், அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால் வயதான பெண்களின் பாதுகாப்பு நிலை கவலைக்குரிய வகையில் மோசமடைந்திருக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்ட 227 பெண்கள் 2010ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 93 பெண்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2010ம் ஆண்டு 50 வயதைத் தாண்டிய 100 ஆண்களும் 2009ம் ஆண்டு 246 ஆண்களும் கொலையுண்டிருந்தனர்.

‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தொலைபேசி எண்ணுக்கு (1253) தினமும் 10க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு முதியவர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கேட்பதாகவும் கூறுகிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் தனியாகவே வாழ்கிறார்கள். பணம், நகை என்று கொள்ளையடிப்பவர்களின் இலக்கு இவர்கள் மேலேயே இருக்கிறது. காவல்துறையின் தகவல்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 54 முதியவர்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும 10 படுகொலைகள் நடந்துள்ளன.

போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட், விசாவுடன் பறப்பதற்கான வசதியான இடமாகவே தமிழக விமான நிலையங்கள் இருப்பதாக தேசியக் குற்றப் பதிவுத்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பதிவான இதுபோன்ற 937 வழக்குகளில் 398 பேர் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் 209 பேரும் மேற்கு வங்களத்தில் 102, மகாராஷ்டிரா 69, ஆந்திரா 68 வழக்குகள் பதிவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு வழக்குகூட இல்லை அல்லது 50க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம் கோவை. தொடர்ந்து திருச்சி, திருவனந்தபுரம் உள்ளது. இதனாலேயேசென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் என்று சுமார் 40 இடங்களுக்கு நேரடி விமான சேவை இருப்பது, அதிகப் பயணிகள் போன்ற காரணங்கள் போலி பாஸ்போர்ட்டுக்கு கூறப்படுகிறது. சென்னையில்தான் அதிக அளவில் ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 243 பேரில் 197 பதிவு பெற்ற ஏஜெண்ட்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கில் போலி ஏஜெண்ட்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஐ.நா. அமைப்பின் போதைக் குற்றத்தடுப்புப் பிரிவு வெளியிட்ட ஆவில், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக இலங்கைத் தமிழர்கள் 23 சதவீதம் பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

மாணவர்கள் தற்கொலை

கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில்தான் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதிலும் சென்னைதான் முன்னிலை. சென்னையில் 170 மாணவர்கள், தில்லியில் 133, மும்பையில் 115 மாணவர்களும் 2010ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

2009ல் வெறும் 0.9 சதவீதமாக இருந்த முதுநிலை பட்டதாரி மாணவர்களின் தற்கொலை சதவீதம் அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் ரேங்க் வாங்க வேண்டும், போட்டி மனப்பான்மை, அளவுக்கு அதிகமான கல்விச் சுமை இவையே இதற்குக் காரணம் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

கள்ளநோட்டு

2010ல் சென்னையில் மட்டும் 72 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு வெறும் 42 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. கள்ள நோட்டுகள் அதிகமாகப் புழங்கும் இடம் மும்பை. கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் மும்பையை (76) நெருங்கிவிட்டோம் நாம். சென்னையை அடுத்து வேலூரிலும் மதுரையிலும் தலா 31 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்த நகரம் கோயம்புத்தூர் (30). பொதுவாகத் தமிழகத்தில் பெருநகரங்களில்தான் கள்ள நோட்டு அதிகம் புழங்குவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

132 சேக் போஸ்ட்களில் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து, கள்ள நோட்டு கடத்துபவர்களைப் பிடித்தாலும் இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர்கள் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருப்பதாகப் போலீஸ் கூறுகிறது. மும்பை, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்துதான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களை கள்ள நோட்டைப் புழங்க விடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் காவல்துறையின் அனுமானம்.

அடையாளம் தெரியாத உடல்கள்

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஏழு அடையாளம் தெரியாத உடல்கள் வருவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 795 உடல்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் இது அதிகம். 2006லிருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.

போலீஸ் ரெக்கார்டுப்படி 2,739 அடையாளம் தெரியாத உடல்களில் 657 உடல்கள் சென்னை, செங்கல்பட்டு, சூளூர்பேட்டை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 248 உடல்கள் அதிகம் கிடைத்துள்ளன. அடையாளம் காண முடியாத உடல்கள் 48 மணி நேரத்தில் மாநகராட்சி உதவியுடன் தகனம் செயப்படுகின்றன அல்லது மருத்துவக் கல்லூரிக்கு தரப்படுகின்றன.
நன்றி கீதா புதியதலைமுறை