Jan 10, 2012

கட்டபொம்மனின் இறுதி நாட்கள்

வணக்கம் நண்பர்களே..


தமிழ் மன்னர்களுக்கு என்றும் ஒரு தனித்துவத்தன்மை உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. சங்க காலம் தொட்டு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் வரைக்கும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை வரலாறு சொல்ல மறந்ததில்லை எனலாம். அந்த மன்னர்களின் வரிசையில் வீரம் என்றதும் நினைவிற்கு வரும் மன்னன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760ல் பிறந்த இந்த வீரமகனுக்கு இன்று 252வது பிறந்த நாள்.

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த மன்னனின் இறுதிநாட்கள் பற்றியதான பதிவினை இன்று ஆரம்பிக்கின்றேன். இப்பதிவு ஒரு தொடர்பதிவு. இதன் தொடர்ச்சியான பாகங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் என்பதையும் கூறிக்கொண்டு பதிவை ஆரம்பிக்கின்றேன்.

வியாபார நோக்கத்திற்காக ஆரம்பத்தில் இந்திய உபகண்டத்தினுள் நுழைந்த ஆங்கிலேயர்கள் பின்நாளில் மண்ணாதிக்க வெறிக்கு உட்பட்டனர் காரணம் மண்ணில் இருந்த வளமும், வீரமும் அவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுதான். அந்த வகையில் இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தென்னாட்டில் உள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து முகஸ்துதி செய்து திறை செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டனர். அவர்களின் மிரட்டலுக்கும் படை பலத்திற்கும் பயந்து பலர் ஓடிச்சென்று திறை செலுத்தினர். பலர் மண்டியிட்டனர்.
சிலர்தான் “தாம் உயிர் நீக்க நேரினும் வரிசெலுத்த முடியாது” என்று கூறினர். ஆங்கிலேயரையும் எதிர்த்து நின்றனர். அவ்வாறு எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்
அவரின் அனல் தெறிக்கும் கோபத்தினை கண்ட ஆங்கிலேயர்கள் தமது நில ஆதிக்கத்திற்கு இவர் தடையாக அமைந்து விடுவார் என்பதை உணர்ந்தனர். போரின் மூலம் அவரை அடக்க எண்ணி யுத்தத்திற்கு தயாராகினர்.

மேஜர் ஜோன் பானர்மன் என்ற ஆங்கில தளபதி தனது பிரமாண்டமான கம்பனிப் படையுடன் 1799 செப்டம்பர் 04ம் திகதி பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு சிவலப்பேரி மார்க்கமாக பாஞ்சாலங்குறிச்சி நோக்கி விரைந்தார்.
இந்நேரத்தில் ஏக காலத்தில் கப்டன் ஓ ரீலி(O"Reilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(collins), டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux), ப்ளேக்(blake), ப்ரௌன்(Brown) போன்ற இதர ஆங்கிலேய அதிகாரிகளும் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி தங்களது படைகளுடன் போருக்கான வேகத்துடன் நின்றனர்.
ஜோன் பானர்மனின் படை 05.09.1799 காலையில் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும், கயத்தாற்றிலிருந்தும் வந்த இராணுவ வீரர்களும் ஆங்கிலேய படையுடன் இணைந்து கொண்டனர்.

இந்நேரத்தில் வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் மறத்தமிழர் படையும் தயாரானது. கட்டபொம்மனின் படையில் சிவத்தையா நாயக்கர், தானாபதிப் பிள்ளையின் தம்பி வீரபத்திரபிள்ளை, சம்பரதி பொன்னப்ப பிள்ளை, ஃபாதர் வெள்ளை எனப்படும் வீரன் வெள்ளையத் தேவன், தன்னலங் கருதாத ஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம் இவர்களுடன் பலர் உள்ளடங்கியிருந்தனர் .
போருக்கான ஆயத்தங்கள் இருபக்கமும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் நோட்டமிடும் நோக்கில் அதாவது கட்டபொம்மனின் யுத்த ஏற்பாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு வழிமுறையை பின்பற்றினர். அதுதான் துாது அனுப்பியது.
மேஜர் ஜோன் பானர்மன் தம்முடைய படையோடு இருந்த ராமலிங்க முதலியாரை ஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமி ஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் துாதுவராக அனுப்பி வைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச் சந்தித்துகட்டபொம்மன் உடனடியாக பானர்மன்னைச் சந்திக்கவும்” என்ற செய்தியை தெரிவித்தனர்.
அதற்கு கட்டபொம்மன் வழங்கிய பதில் இவ்வாறு இருந்தது.
எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்தரவு வந்தாலன்றி, மேஜர் பானர் மென்னைப் பார்க்க முடியாது” என்பதாகும்.


"I lost no time in ordering the polegar to surrender at discretion to the company. if i would grant a written cowl, he said he would come to me; but not without."
 அரசின் செயலாளரான அப்போது இருந்த ஜோசையா வெப்பிற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மேஜர் ஜோன் பானர்மென் 05.09.1799 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகளே அவை..

பெயரளவில் நடந்த சமரச முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. ஆங்கிலேயருக்கு அடங்கி ஒடுங்கிப் போகவும் திறை செலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராக இல்லை என்பது ஆங்கிலேயர்களுக்கு மேலும் உறுதிபடத் தெளிவானது.

அடுத்த கட்டமாக போர்தான் தீர்வு என ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். காலத்தால் அழியாத, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர் ஆரம்பமானது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தெற்குக் கோட்டை வாசலும், வடக்குக் கோட்டை வாசலும் ஆங்கிலேய படையினரால் முதலில் தாக்கப்பட்டது. இந்த முதற்கட்ட போரில் ஆங்கிலேய படையின்  நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர். இருப்பினும் போர் தீவிமாக நடைபெற்றது. ஆங்கிலேய படையின் பீரங்கிகள் செயற்பட தொடங்கின.., அவை கோட்டைச் சுவர்களைத் துளைத்து உடைத்தெறியத் தலைப்பட்டன.
இதனால் கோட்டையை இழந்து விடுவோமோ என்ற நிலையில் தீவிர ஆலோசனையை உடனடியாக மேற்கொண்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இறுதியில் திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்று விட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை நோக்கி விரைந்து சென்றார்.

மறுநாள் முழுவதும் கோட்டையில் இருந்த படைகளுடன் இடம்பெற்ற கடுமையான போரினை தொடர்ந்து 09.09.1799 காலை 09.30 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை மேஜர் பானர்மென் கைப்பற்றிக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும் திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட அவர் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பல பாளையக்காரர்களுக்கும் கடிதங்களின் ஊடாக கட்டளையிட்டார்.
அந்த கடிதம் வடிவமைக்கப்பட்ட விதம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தன்மையை மேலும் பறை சாற்றி நிற்கிறது எனலாம். 
"ஒவ்வொருவருடைய குணத்திற்கும் கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும் அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப் பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம் எழுதியதாக அவரே அரசுக்கு 11.09.1799 இல் நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
... that I found it necessary to very the style of my letters to the different polegar, according to the knowledge I had of their characters, and what I knew of their dispositions towards cataboma Naig.

கடிதங்களின் மூலமாக கட்டளைகளை பிறப்பித்த பின் ஆங்கிலேய படைகள் கட்டபொம்மனை தேடுவதற்கு தயாராகின. லெப்டினென் டக்ளஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளையும், கப்டன் ஓ ரெய்லி தலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும் இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு முக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர் பானர்மென் செல்வதும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம் சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனது படைவீரர்களுடன் கட்டபொம்மனைப் பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்கு உதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும் படியும் ஆங்கிலேயருக்கு தகவல் தந்தார். உற்சாகமடைந்த பானர்மென், குறிப்பிட்ட அளவு படைவீரர்களுடன் கப்டன் ஓ ரெய்லியையும் லெப்டினென் டக்ளஸையும் எட்டயபுரம் படையினருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.
கோட்டையை விட்டு வெளியேறிச் சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டயபுரத்தாரின் படைகள் கோலார்பட்டி கோட்டைப் பகுதியில் எதிர்கொண்டன. இச்சம்பவம் 10.09.1799 அன்று நடைபெற்றது. இரண்டு தமிழர் படைகளுக்குமிடையில் போர் இடம்பெற்றது. இதில் இரு தரப்பிலும் பெரிய சேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர் வீரப் போரிட்டனர். போரின் முடிவில் ஆறு வீரர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, அவரது தம்பி வீரபத்திரபிள்ளை, ஆதனூர் வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம் சுப்பா நாயக்கர், முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய 34 பேர்களை ஆங்கிலப் படையினர் அப்போரின் போது கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அன்று எட்டயபுரம் செய்த அந்த துரோகத்திற்கும், பாவத்திற்கு பரிகாரமாகவே ஆங்கிலேயரை எதிர்க்க பின்நாளில் பாரதியார் அதே மண்ணில் தோன்றினார் என்று பலர் இன்று கருதுகின்றனர்..!)
Previous Post
Next Post

0 Comments: