Aug 3, 2012

மொபைல் டெவலப்பர்களின் தேவை அதிகரிக்கிறது


சென்ற வருட ஸ்மார்ட் போன்களின் விற்பனை எண்ணிக்கை (487.7 மில்லியன்) ஒட்டுமொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் நெட்புக்குகள் (414.6 மில்லியன்) விற்பனையை மிஞ்சி விட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் போக்கினை கோடிட்டுக் காட்டும் கார்ட்னர், ஐ.டி.சி, கனாலிசிஸ் போன்ற ஆய்வறிக்கை நிறுவனங்கள் வெளியிடும் மொபைல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பற்றிய தகவல்கள் பிரமிப்பூட்டுவையாக இருக்கிறது.
விலை அதிகம் உள்ள ஆப்பிள் 4S, 3GS மொபைல்களின் விற்பனை முந்தைய ஆண்டு விற்பனை சாதனைகளையெல்லாம் முறியடித்து விட்டது.  ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலில் வரும் சாம்சங் மொபைல் போன்கள், டேப்லட்களின் விற்பனை விகிதமும் ஏறுமுகமாகவே இருக்கிறது.  இதில்லாமல் சோனி, மோட்டோரோலா, எல்.ஜி, எச்.டி.சி, ஏசர், விண்டோஸ் மொபைல் எனப் பிரபல தயாரிப்புகளுக்கும் பஞ்சமே இல்லை.

குறைந்தபட்ச விலை கொண்ட மொபைலும் பேசுவதற்காக மட்டுமே வாங்கப்படுவதில்லை என்பதை அறிவோம். கேமரா, எம்.பி3 போன்ற வசதிகள் அடிப்படைத் தேவையாகிவிட்ட நிலையில் டச் ஸ்கிரீன் போன்ற வசதிகள் உங்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். முப்பதாயிரத்தில் இருந்துதான் தொடக்க விலையே என்ற நிலை போய் மூவாயிரத்திற்குக் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது. இலவச மொபைல் இயக்கச் சூழலான ஆண்ட்ராய்ட் வந்தபிறகு அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் சாதனங்கள் சாமானியர்களும் அணுகும்படியாக உள்ளது.
மொபைல் வழியான இணைய தேடல்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைபின்னல் உலாக்கள் டெஸ்க்டாப் கணினிகள் வழியே அனுகும் இணைய பயன்பாடுகளை மிஞ்சும் வண்ணம் இருக்கிறது. வங்கிக் கணக்கை கையாள்வது முதல் இணைய முன்பதிவு வரை ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகமும் உள்ளங்கையில் அடங்கி விடுகிறது. ஸ்மார்ட் பொன்களின் விலை குறையும்போது இவற்றின் பயன்பாட்டுச் சதவிகிதம் இன்னும் ஏறுமுகத்தில் இருக்கும்.  ஒரு துறை வளரும்போது அந்தத் துறையில் பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது இயற்கை நியதி. மொபைல் மென்பொருட்களை உருவாக்கும் திறனுள்ள வல்லுனர்களின் தேவை மின்னல் வேகத்தில் எகிறிக் கொண்டே போகிறது. ஐபோன், ஆண்ட்ராய்ட் போன்ற நவீன மொபைல்களுக்கு மென்பொருள் எழுதும் டெவலப்பர்களின் தேவையில் பெரியளவு தட்டுப்பாடு நிலவுகிறது.
மொபைல் சாதனங்களுக்கு மென்பொருள் உருவாக்க முற்றிலும் மாறுப்பட்ட அணுகும் முறை தேவைப்படுகிறது. டெஸ்க்டாப் கணினியில் இருப்பது போன்ற நினைவகமோ (memory), செயலியோ (processor) மொபைல் சாதனத்தில் இருக்காது.  நீண்ட நேரம் மின்கலத்தில் (battery) சக்தி இருக்க தேவைக்கு மிஞ்சி எந்த வளங்களையும் பயன்படுத்தாத வண்ணம் மொபைலுக்கான மென்பொருளை வடிவமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் நம் பாடதிட்டதில் படிப்பதற்குள் இலட்சக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை அறிய வேண்டும். அதற்குள் தற்போதைய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாடத்திட்டதைத் தாண்டி படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.


பி.கு: இக்கட்டுரை கம்ப்யூட்டர் உலகம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. இதுவே ஒரு மாத இதழில் எழுதிய எனது முதல் கட்டுரை. இக்கட்டுரையை வெளியிட்டு ஊக்கப்படுத்திய கம்ப்யூட்டர் உலகம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Previous Post
Next Post

0 Comments: