Apr 1, 2015

உங்கள் தங்கம்… எங்கள் லாபம்! நகைக் கடன் பின்னணி


அபரிமிதமாகப் பெருகிக்கிடக்கின்றன அடகுக் கடைகள். முத்தூட் ஃபைனான்ஸ், முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்ட் ஃபைனான்ஸ், கொசமற்றம் ஃபைனான்ஸ்… என ஒவ்வொன்றும் சங்கிலித் தொடர் நிறுவனங்களாக உருமாற்றம் பெற்று, மிகப் பெரிய கார்ப்பரேட்களாக உருவெடுத்திருக்கின்றன. மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள் அதிகரிக்க, அதிகரிக்க… இந்த நகைக்கடைகளின் எண்ணிக்கையும் அவர்களின் லாபமும் அதிகரிக்கின்றன. விடிந்து எழுந்ததும் கையில் இருக்கும் கடைசி 100 ரூபாயுடன் டாஸ்மாக் வாசலில் காத்திருக்கும் தமிழன், தன்னிடம் இருக்கும் கடைசி கிராம் தங்கத்துடன் அடகுக் கடை வாசலில் தவம் கிடக்கிறான். இதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்தியர்களின் தங்க மோகத்தில் இருந்து தொடங்க வேண்டும். 

இந்தியாவைப்போல, தங்கத்தின் மீது மோகம் கொண்ட ஒரு நாடு உலகில் இல்லை. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் மூட்டை மூட்டையாக அள்ளப்பட்ட தங்க நகைகளை வைத்து மொத்த இந்தியாவுக்கும் பட்ஜெட் போடலாம். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடுவாலியில் 50 மீட்டர் இடைவெளியில் 200 நகைக்கடைகள் இருக்கின்றன. வேலூரில் தங்கத்தாலேயே இழைத்து, கோயில் கட்டி ஆன்மிக சந்தை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் மொத்தத் தங்கத்தில் 11 சதவிகிதத்தை இந்தியர்கள் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெறும் 25 சதவிகிதம் குற்றங்களுக்கு தங்கம் சார்ந்த காரணங்களே பின்புலம்.  

உலக தங்கக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் அளவு 22 ஆயிரம் டன்களுக்கும் அதிகம். உலகப் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த ‘2008 உலகப் பெருமந்தம்’ (Great Recession in 2008) நிகழ்ந்தபோதும் இந்தியர்களின் தங்கம் வாங்கும் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் என்பது ஒரு நம்பகமான சேமிப்பு என்பதைத் தாண்டி, அது சமூக கௌரவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 40 லட்ச ரூபாய்க்கு ஒரு கிரவுண்டு நிலம் வாங்கினால்கூட, அதைத் தூக்கி தலையில் வைத்துக்கொள்ள முடியாது. நகை வாங்கினால் அணிந்துகொண்டு தங்கள் கௌரவத்தை உலகத்துக்குப் பறைசாற்றலாம். அதனால்தான் மக்களின் தங்கப் பித்து இடைவிடாமல் தொடர்கிறது.

ஆனால், வாங்கிய தங்கம் எல்லாம் அணிவதற்காக அல்ல. சரிபாதி அல்லது அதையும்விட அதிகமான நகைகள் அடகுக் கடைகளுக்கே செல்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடகுக் கடைகள் என்பவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். தங்க நகை மட்டும் அல்லாமல், பித்தளை பாத்திரங்களையும் அங்கு அடகு வைக்கலாம். அடகுக் கடை நடத்துபவர், சமூக மதிப்பில் சற்று கீழ் வைத்துதான் மதிப்பிடப்படுவார். நகையை அடகுவைக்கச் செல்பவர்கள் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் அதைச் செய்ய நினைப்பார்கள். அடகுபிடிப்பதும், அடகுவைப்பதும் வெளியில்  சொல்லிக்கொள்ள முடியாத, சங்கடமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது, இரு தரப்புக்கும் சங்கடம் இல்லை. ‘கையில இருக்கு தங்கம்… கவலை ஏன்டா சிங்கம்?’ எனத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து நம் நகைகளை அடகுவைக்க அறைகூவல் விடுக்கிறார்கள் நடிகர்கள். மூன்று நிமிடங்களில் ‘ஒண்ணுக்கு’க்கூடப் போக முடியாது. ஆனால் இவர்கள் ‘மூன்றே நிமிடங்களில் தங்க நகைக்கடன்’ தருவதாக அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அடகு என்பது சமூகத்தின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

‘முத்தூட் ஃபைனான்ஸ்’தான் தங்க நகைக் கடன் வழங்குவதில் உலகிலேயே பெரிய நிறுவனம். இதற்கு இந்தியா முழுவதும் 4,256 கிளைகள் இருக்கின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் வங்கிக்கே, 2,100 கிளைகள் மட்டுமே. 2009-ல் இந்த நிறுவனத்துக்கு 985 கிளைகள்தான் இருந்தன. அதன் பிறகான இந்த ஐந்து ஆண்டுகளில் 3,000-த்துக்கும் அதிகமான புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. கணக்கிட்டுப்பார்த்தால் ஒரு நாளைக்குச் சராசரியாக இரண்டு புதிய கிளைகள். 2011-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி ஒரே நாளில் 103 புதிய கிளைகளைத் திறந்துள்ளது இந்த நிறுவனம்.

8,500 கோடி ரூபாய் மதிப்புள்ள மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ்தான், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தங்க நகை அடகு நிறுவனம். 2008-2009 நிதியாண்டில் 165 கோடியாக இருந்த இதன் வருவாய், 2012-2013ம் ஆண்டில் 2,217 கோடியாக அதிகரித்தது. நான்கே ஆண்டுகளில் வருவாய் விகிதம் மலைக்கவைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. குஜராத், அசாம், ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார், டையூ டாமன் என இந்த நிறுவனத்துக்குக் கிளைகள் இல்லாத இடங்களே இல்லை. கேரளாவில் மோகன்லால், தமிழ்நாட்டில் விக்ரம், ஆந்திராவில் வெங்கடேஷ், கர்நாடகாவில் புனித் ராஜ்குமார், இந்தியில் அக்ஷய் குமார் என அந்தந்த மொழியின் முன்னணி சினிமா ஹீரோக்களைத் தன் விளம்பரத்தில் நடிக்கவைக்கிறது இந்த நிறுவனம். (கேரளாவில் மலபார் கோல்டு நிறுவனத்துக்கும் மோகன்லால்தான் விளம்பர அம்பாசிடர். மலபார் கோல்டில் தங்கம் வாங்கச் சொல்லும் மோகன்லால், மணப்புரம் கோல்டில் அடகு வைக்கச் சொல்கிறார்.)  

எதற்காக அடகு வைக்கின்றனர்?

விவசாய கிராமங்களில் வெள்ளாமைத் தொடங்குகிற நேரத்தில் ஒவ்வொன்றுக்கும் பணம் வேண்டும். உழவுசெய்ய, நடவு நட, உரம் வாங்க எல்லாமே செலவுதான். கையிருப்பில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் அளவுக்குத் தமிழக விவசாயி வளமாக இல்லை. எனவே செலவை ஈடுகட்ட முதல் பலியாவது அந்த விவசாயியின் மனைவி அணிந்திருக்கும் தோடு, மூக்குத்தி, வளையல் போன்றவைதான். இதனால் விவசாயம் ஆரம்பிக்கும் காலத்தில் அருகில் உள்ள அடகுக் கடையின் வியாபாரம் ஏறுமுகத்தில் இருக்கிறது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குத் தொழிலுக்குச் செல்லும்போது பணம் தேவை. அதற்கும் அடகுக் கடைகளுக்குத்தான் செல்கின்றனர்.

மதுரை, தேனி சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்யாணம், காதுகுத்து போன்றவற்றுக்குச் செய்முறை செய்வதற்காகவே மக்கள் நகையை அடகு வைக்கின்றனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, நகைகள் அடகுக் கடைக்குச் செல்கின்றன. கல்யாணச் செலவுகளுக்காக, மகளின் பிரசவத்துக்காக, கோடை வெயிலைச் சமாளிக்க ஏ.சி வாங்க, இன்னோர் அவசரக் கடனை அடைப்பதற்காக… என நகையை அடகு வைக்கக் காரணங்களுக்குப் பஞ்சம் இல்லை. அதில் இரண்டு காரணங்கள் குறிப்பிட்டுக் கவனிக்கத் தகுந்தவை. ஒன்று மருத்துவச் செலவுகள். இன்று, நோயாளிகள் இல்லாத வீடு இல்லை. ஒரு திடீர் நோய், வாழ்நாள் சேமிப்பையே காவு வாங்கி குடும்பத்தை தெருவில் நிறுத்துகிறது. அரசு மருத்துவமனைகளின் அவலமும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவுகளின் அதிகரிப்பும் குடும்பத்தின் ஒரே சேமிப்பான நகைகளைக் காவு கேட்கிறது.

மற்றொன்று கல்விச் செலவுகள். தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளைப் புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்க பெற்றோர்கள் தயாராக இருக்கும்போது, நகையை அடகு வைக்கத் தயங்குவார்களா? ஒவ்வோர் ஆண்டும் பள்ளி தொடங்கும் நாட்கள்தான் அடகுக் கடைகளுக்கு அறுவடைக் காலம். பள்ளிகள் திறக்கும் காலத்தில் ‘ஸ்கூல் ஓப்பன் மேளா’ என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சில சலுகைகளையும் வழங்கி, மக்களை அடகு வைக்க ஊக்குவிக்கிறார்கள்.

மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சேர்மன் நந்தகுமார் தரும் தகவலின்படி, நகை அடகு வைப்பதற்கான காரணங்களில் இப்போது பிரதானமாகவும் முதன்மையானதாகவும் இருக்கின்றன கல்விச் செலவுகள். குறிப்பாக பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் நகர்ப்புறங்களில் அடகுக் கடைகளின் அதிகரிப்புக்கு ஆதாரமாக இருப்பது கல்விச் செலவுகள்தான். மணப்புரம் நிறுவனத்தின் வர்த்தகத்தில் 40 சதவிகிதம் பெருநகரங்களில் தான் நடக்கிறது.

அரசு வங்கிகள் என்னவாயின?

பொதுத்துறை வங்கிகளிலும் தங்க நகைகளை அடகு வைக்கலாம். இங்கு நகைக் கடனுக்கான வட்டிவிகிதம் மிகக் குறைவு. ஆனால், மக்கள் ஏன் இந்தத் தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றால், பொதுத் துறை வங்கிகளில் நகை அடகு பிடிப்பதற்கான நடைமுறைகள் சிக்கலானவை. பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படியே சமர்ப்பித்தாலும் நகையின் மதிப்பில் 60-70 சதவிகிதம் அளவுக்கே கடன் கிடைக்கும். கால் பவுன், அரை பவுன் எடுத்துச் சென்றால், அடகு பிடிக்க மறுக்கிறார்கள். குறைந்தபட்சம் 2 பவுன் அல்லது 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் அடகு வைக்க முடியும் எனத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். ஒவ்வொரு வங்கியிலும் இந்தக் கெடுபிடி வேறுபடுகிறது. மேலும், அடகு வைப்பதற்கு அந்த வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சிறுநகர வங்கி ஒன்றில், நகையை அடகு வைப்பதற்காக ஒருவர் வந்தால், ஒரு நாள் ஓடிவிடுகிறது.

ஆனால் தனியார் அடகு நிறுவனங்களில் அதிகபட்சம் 10 நிமிடங்கள்தான். 2 கிராம் எடுத்துச் சென்றால்கூட வாங்கிக்கொண்டு பணம் தருகிறார்கள். நகையையும் அடையாள அட்டையையும் மட்டும் எடுத்துச்சென்றால் போதும். அவர்களே நம்மைப் புகைப்படம் எடுத்து, அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்து, விண்ணப்பத்தை நிரப்பி, கையெழுத்துப் பெற்று பணத்தைத் தந்துவிடுகின்றனர். ஓர் ஊரில் இருந்து தொடர்ந்து
100 பேர் அடகு வைக்க வருகிறார்கள் என்றால், ‘எதுக்கு நீங்க இவ்வளவு தூரம் அலையிறீங்க? நாங்க வர்றோம்’ என அங்கும் ஒரு கிளை ஆரம்பித்துவிடும் அளவுக்கு அதிவேகத்தில் இருக்கிறது இவர்களின் கஸ்டமர் சர்வீஸ்.  

கிராமப்புறங்களில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. இவற்றில் விவசாயத்துக்காக நகைகளை அடமானம் வைத்தால், ஆறு மாதங்கள் வரையிலும் வட்டியில்லா கடன் பெறலாம். பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுகுறித்த விவரமே தெரிவது இல்லை. அரசு இதுபற்றி எந்த விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தவும் இல்லை. இதனால் இந்தப் பணத்தை, அந்தக் கூட்டுறவு வங்கிக்கு தலைவர், செயலாளர் என நிர்வாகிகளாக இருப்பவர்களே பல்வேறு பினாமி பெயர்களில் அல்லது போலி நகைகளை வைத்து கடன் வாங்கி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.

அடகுக் கடைகளால் ஆதாயமே இல்லையா?

‘இது கழுத்துல கிடந்ததைவிட கடையில இருந்த நாட்கள்தான் அதிகம்’ என்பது நம் அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வசனம். எவ்வளவோ சிரமங்களுக்கு இடையிலும் நம் குடும்பங்களில் தங்க நகை வாங்குவதே ஓர் ஆத்திர, அவசரத்துக்கு அடகு வைத்துக்கொள்ளலாம் என்பதற்காகத்தான். இதில் பெரும் பகுதி உண்மை இருக்கிறது. நான்கைந்து பவுன் நகையை வைத்துக்கொண்டு அடகு வைத்து, மீட்டு, மீண்டும் அடகு வைத்து, மறுபடியும் மீட்டு… இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடாத தமிழ்க் குடும்பம் ஏது? நம் ஒவ்வொருவரும் இதற்கு சாட்சிகளாக இருக்கிறோம். உறவுகள் உதவாத நிலையில், சுற்றம் கைவிட்ட நிலையில் தங்கள் கையிருப்புத் தங்கத்தை அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கின்றனர். இப்படி நகை அடகின் மூலம் கடும் துயரத்தின் கசப்பான தருணங்களை நீந்திக் கடந்தவர்கள் உண்டு. ஆனால், இது எல்லாம் உள்ளூர் நகைக் கடைகளில்தான். இந்தச் சங்கிலித் தொடர் அடகு நிறுவனங்களில் ஒரு நாள் வட்டி கட்டத் தவறினாலும் மீட்டர் வட்டி, கந்து வட்டியைவிட அதிகமாகப் போட்டுத் தாக்கிவிடுகின்றனர். இரண்டு, மூன்று மாதங்கள் கட்டாமல் விட்டுவிட்டால்,  பெரும் தொகை எகிறிவிடுகிறது. ‘பணத்தைக் கட்டி நகையை மீட்பதைவிட அப்படியே விட்டுவிடுவதுதான் லாபம்’ என நம்மையே எண்ண வைத்துவிடுவார்கள். சொல்லப்போனால் அதுதான் அவர்களின் நோக்கமும்கூட. அதனால்தான் நகையின் மதிப்பில் அதிகபட்சம் எவ்வளவு சதவிகிதம் தர முடியுமோ அவ்வளவு தருகின்றனர். அப்படி வழங்குவது, உங்கள் கஷ்டத்தைத் தீர்க்க நினைக்கும் கருணை அல்ல; சிக்கும்போது வளைத்துப்போட்டுவிடும் குள்ளநரித்தனம்.

மீட்கப்படாத நகைகள் என்னவாகின்றன?

தினசரி செய்தித்தாளின் முழு இரண்டு பக்கங்களிலும் வெறும் எண்களாகத் தென்படும் விளம்பரத்தை நீங்கள் அவ்வப்போது பார்த்திருக்கலாம். ஏதோ ப்ளஸ் டூ பரீட்சை முடிவுபோல இருந்தாலும், அது தங்க நகை அடகுக்கடையின் ஏல அறிவிப்பு. நகையை அடகு வைத்து கடன் பெற்றவர்கள் உரிய காலத்தில் வட்டியையும் அசலையும் கட்டி மீட்காததால், அடகுக் கடைகள் நகையை ஏலம் விடுகின்றன. செய்தித்தாளை வாசிக்கும் மக்கள், சுவாரஸ்யம் இல்லாத அந்தப் பக்கத்தைக் கடந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த எண்களின் உரிமையாளர்களுக்கு விளம்பரத்தைப் பார்க்கும்போது வலியும் வேதனையும் துளித் துளியாக அதிகரிக்கிறது.

இவர்கள் வசூலிக்கும் வட்டியின் அளவைப் பாருங்கள். ஒரு மாதம் வரை 14 சதவிகிதம், ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை                   17 சதவிகிதம் எனத் தொடங்கி, 12 மாதங்களுக்குப் பிறகு வட்டி 26 சதவிகிதம் ஆகிவிடுகிறது. சேட்டு கடையில் கொஞ்சம் முன்பின் இருந்தாலும் ஒரு நாள், ஒரு வாரம் அனுசரித்துப் பேசிக்கொள்ள முடியும். ஆனால் இங்கு, அரை நாள் தாண்டிலும் வட்டிவிகிதம் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுவிடும். பொதுவாக அடகு வைத்த நாளில் இருந்து ஓர் ஆண்டு ஏழு நாட்களானால், கெடு கடந்துவிட்டது எனப் பொருள். அந்த நகை ஏலம் விடப்படுவதற்கான தகுதியைப் பெற்றுவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதிவு அஞ்சலில் தெரியப்படுத்தி, நகைகள் ஏலம் விடப்படும். ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றாலும் பெரும்பாலும் தங்க நகை வியாபாரிகள்தான் வருவார்கள். நகையை உருக்கினால் என்ன மதிப்பு வரும் என்பதைக் கணக்கிட்டு அதன்படி ஏலம் எடுப்பார்கள். ஒரு பவுன், அரை பவுன் அடகு வைத்தவர்களில் இருந்து 50 பவுன் அடகு வைத்தவர்கள் வரை பலர் மீட்காமல் விடுகின்றனர். இப்படி மீட்காத நகைகளை ஏலம் விடுவது தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

அடகுக் கடைக்கு என்ன ஆதாயம்?

பிரமாண்ட நகை அடகு நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலேயே நகையின் அதிகபட்ச மதிப்புக்குக் கடன் தந்துவிடுகின்றனர். ஆகவே, மீட்காமல் விடும் நகைகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகை அவர்களைப் பொறுத்தவரை சிறியது. வட்டியின் மூலம் ஒரு பெருந்தொகை கிடைக்கிறது. அதைவிட நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொன்றும் இருக்கிறது.  சில தங்க நகை அடகு நிறுவனங்கள் மக்களிடம் அடகு பிடிக்கும் நகைகளை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பொதுத் துறை வங்கிகளில் மறு அடமானம் வைக்கின்றன. நாம் நகைகளை அடகு வைக்கும்போது கையெழுத்திடும் ஆவணங்களைக்கொண்டு, அடமானக் காலத்தில் அந்த நகைகளை அவர்களின் சொத்துக்களாக (Asset) கணக்குக் காட்ட முடியும். அந்தச் சொத்து ஆவணங்களின் அடிப்படையில் மறு அடமானக் கடன் பெறுகின்றனர். அதாவது நாம் அடகு வைக்கும் நகைகளை அப்படியே எடுத்துச் சென்று மறு அடகு வைப்பது இல்லை. அந்த ஆவணங்களை மட்டுமே இப்படிச் செய்கிறார்கள். இப்படி பெறப்படும் கடனுக்கு சுமார் 10 முதல் 13 சதவிகிதம் வரையிலும் வட்டி. ஆனால், மக்களுக்கு வழங்கும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் இதைவிட அதிகம் என்பதை மேலே  பார்த்தோம். நம் நகையைக்கொண்டே குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, நமக்கு அதிக வட்டிக்குக் கடன் தருகிறார்கள். இடைப்பட்ட வித்தியாசம் இவர்களுக்கு லாபம்.

இப்படியாக அரசின் விதிமுறைகளில் புகுந்து புறப்படும் இந்த அடகு நிறுவனங்கள் மக்களின் உழைப்பை தங்கள் லாபமாக மாற்றுகின்றன. பொருளாதார நெருக்கடி அதிகரிக்க… அதிகரிக்க… தங்கள் கையிருப்புத் தங்கத்தை அடகு வைத்து வாழவேண்டிய நிர்பந்தத்துக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். வேலைப்பறிப்புகளும், புதிய வேலை கிடைக்காத சூழலும் எல்லா துறைகளிலும் நிறைந்திருக்கும் இந்த நாட்களில், அடகுக் கடைக்கு அடிக்கடி போகவேண்டிய வாழ்க்கை நெருக்கடி உருவாகியிருக்கிறது. மக்கள் துயரத்தில் வாடும் இந்தக் காலம்தான் அடகுக் கடைகளின் அடைமழைக் காலம். அவர்களுக்கு எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம். ஆனால், இருக்கும் கடைசிக் குண்டுமணித் தங்கத்தையும் அடமானம் வைத்துதான் வாழ முடியும் என்ற நிலையில் தன் குடிமக்களை வைத்திருப்பது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா?
Previous Post
Next Post

0 Comments: